தமிழ் சினிமாவில் இது இரண்டாம் பாகங்களுக்கான நேரம் என்று கூறலாம். அண்மைக்காலமாக தமிழில் இரண்டாம் பாகங்கள், மறுபதிப்பு, மறு வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளி வருகின்றன.
அந்த வகையில் ‘இந்தியன் 2’, ‘புஷ்பா2’ உள்ளிட்ட படங்கள் வெளியீடு காண உள்ளன.
கடந்த 1935ஆம் ஆண்டு வெளியான ‘ஹண்டர்வாலி கி பேட்டி’ என்ற இந்திப் படத்தின் இரண்டாம் பாகம் 1943ஆம் ஆண்டு வெளியானது. இந்தியத் திரையுலகில் இரண்டாம் பாகமாக வெளியான முதல் படம் இதுதான்.
அதே போல் தமிழில் காலஞ்சென்ற நடிகர் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற தலைப்பில் இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. எனினும் இப்படம் திட்டமிட்டபடி உருவாகவில்லை. இந்நிலையில் 1979ஆம் ஆண்டு ‘கல்யாணராமன்’ என்ற படம் ரங்கராஜன் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியானது. இதன் தொடர்ச்சியாக 1985 ஆம் ஆண்டு ‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்ற படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
தமிழ் சினிமாவில் வெளியான இரண்டாம் பாகங்களின் பட்டியலில் முதல் படமாக ‘ஜப்பானில் கல்யாணராமன்’ இடம் பெற்றது. இதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட ‘நான் அவனில்லை’ படத்தின் இரண்டாம் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியானது.
இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து ‘காஞ்சனா’, ‘சிங்கம்’ ஆகிய படங்களின் இரண்டு, மூன்றாம் பாகங்கள் வெளியாகி வசூலில் அசத்தின. மேலும் ‘பசங்க 2’, ‘சென்னை28 2’, ‘பில்லா 2’, ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற இரண்டாம் பாகங்கள் வெளியாகின.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து பெற்ற வசூல் திரை உலகத்தினரை வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், சுந்தர் சி. இயக்கத்தில் உருவான ‘அரண்மனை’ படத்தின் நான்கு பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி சாதனை படைத்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது மிகவும் கடினம். ஏனெனில் முதல் பாகத்தில் தங்களைக் கவர்ந்த அனைத்து அம்சங்களும் அடுத்த பாகத்திலும் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். தவிர வேறு சில அம்சங்களும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவுகளும் அதிகமாக இருக்கும். ஒரு வேளை படம் தோல்வி கண்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என திரையுலக பிரமுகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முந்தைய பாகங்களின் கதைச் சுருக்கத்தை ரசிகர்கள் மறப்பதில்லை. எனவே முன்பு சொல்லப்பட்ட கதை, கதைக்களம் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையைக் காட்சிப்படுத்துவதை ரசிகர்கள் விரும்புவதில்லை. இத்தகைய அனைத்து அம்சங்களையும் கொண்டுதான் ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க முடிகிறது.
“தெலுங்கில் வெளியான ‘பாகுபலி’, கன்னடத்தில் வெளியான ‘கே.ஜி.எப்’, ஆகியவை தென்னிந்திய படங்களுக்கான மவுசை வட இந்தியாவில் உயர்த்தியுள்ளன.
இப்படங்களின் வெற்றிப் படிகளைப் பின்பற்றித்தான் தற்போது ‘இந்தியன் 2’, ‘புஷ்பா 2’ ஆகிய இரண்டாம் பாகங்கள் உருவாகியுள்ளன. மேலும் ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ’டிமான்டிகாலனி 2’, ’கலகலப்பு 3’, ‘பிச்சைக்காரன் 3’, ‘தனி ஒருவன் 2’, ‘தேசிங்குராஜா 2’ உள்ளிட்ட படங்கள் உருவாகின்றன.
பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் ‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் தமிழ்த் திரையுலகில் மட்டுமே இரண்டாம் பாகங்கள், முன்னோடிப் படங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். தற்போது பிற மொழிகளும் இது போன்ற படைப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றன. எனவே பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்கள் விரைவில் வெளியீடாவதை எதிர்பார்க்கலாம்.

