விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘கொடேஷன் கேங்’. இதில் பிரியாமணி நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் சாரா கவனிக்கத்தக்க முதன்மைக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு சென்னையில் வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் படம் திரைகாணும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
“இந்தப் படத்தை பிரியாமணியை வைத்துத்தான் முதலில் தொடங்கினோம். அடுத்து இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், அக்ஷயா, சாரா என அடுத்தடுத்து பலர் ஒப்பந்தமாகினர்.
“படத்தின் சில காட்சிகளை காஷ்மீரில் படமாக்கினோம். அங்கு படப்பிடிப்பை நடத்துவது எவ்வளவு சிரமமானது என்று அத்தகைய அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு நன்கு தெரியும். ஒளிப்பதிவாளர், சண்டைப் பயிற்சியாளர், ஒப்பனைக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருமே கடும் குளிரிலும் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர்.
“நடிகர் நடிகையரைப் பொறுத்தவரை தங்களுக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளனர். ‘தெய்வ திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம் மனதைக் கவர்ந்த பேபி சாரா அருமையாக நடித்துள்ளார்.
“அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதுபோன்ற படங்களில் தொடர்ந்து நடிக்கும் பட்சத்தில் ,அவர் தவிர்க்க முடியாத இளம் கதாநாயகியாக உருவெடுப்பார்,” என்றார் விவேக் குமார் கண்ணன்.
மூன்று வெவ்வேறு ஊர்களில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு ‘கொடேசன் கேங்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பெண்களே கூலிப்படையைப்போல் செயல்பட்டு கொலை செய்யும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளனவாம். பள்ளி மாணவியாக நடித்துள்ளார் சாரா.
உடன் படிக்கும் மாணவனுடன் போதைப்பொருள் பயன்படுத்துவது, காதல் வயப்படுவது என ஒவ்வொரு காட்சியிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியதாக மொத்த படக்குழுவும் சாராவை பாராட்டுகிறது.
பிரியாமணியை பொறுத்தவரை வழக்கம்போல் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம். படம் முழுவதும் அவருக்கு பல சண்டைக்காட்சிகள் உள்ளனவாம்.
முன்னோட்டக்காட்சித் தொகுப்பு விழாவில் பேசிய பிரியாமணி, இந்த நாளுக்காக தாம் ஆவலுடன் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
“இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. அவர் என்னிடம் முதலில் கூறிய கதை சில காரணங்களால் படமாகவில்லை. இரண்டாவதாக சொன்ன இந்தக் கதை மிகவும் பிடித்துப்போனது. எனது திரை வாழ்க்கையில் இதுவரை ஏற்று நடித்திராத ஒரு கதாபாத்திரத்தை அவர் அளித்துள்ளார்.
“ஜாக்கி ஷ்ராஃப் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர் எங்களுடன் இணைந்தது பெரும் பலம். ஜூலை மாதம் இப்படம் வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்,” என்றார் பிரியாமணி.
இப்படத்துக்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார்.

