இடத்தைத் தக்கவைப்பதே சாதனைதான்: சஞ்சிதா

இடத்தைத் தக்கவைப்பதே சாதனைதான்: சஞ்சிதா

4 mins read
188b740b-82ce-4e57-b463-a7fd85d46ea8
சஞ்சிதா. - படம்: ஊடகம்

திரையுலகில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

இத்தனை ஆண்டு காலம் திரையுலகில் நீடிப்பது, அதிலும் கதாநாயகியாக நடிப்பது ஒரு வகையில் சாதனைதான் என்று தனக்குத்தானே பாராட்டுச் சான்றிதழ் அளித்துக் கொள்கிறார்இவர்.

கடந்த 2006ஆம் ஆண்டு ‘முங்கரு மேல்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சஞ்சிதா. அதன் பிறகு 17 ஆண்டுகள் வேகமாக கடந்து சென்றுவிட்டன என்றும் இத்தனை ஆண்டு காலம் திரையுலகில் நீடிக்க முடியும் எனத் தானே நம்பியதில்லை என்றும் சொல்கிறார்.

தற்போது ‘மாயவலை’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள சஞ்சிதாவுக்கு கைவசம் மேலும் நான்கைந்து படங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளாராம்.

கொரோனாவுக்குப் பின்னர் ஐந்து படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என கனவில்கூட நினைக்கவில்லை என்றும் எல்லாம் திட்டமிடாமலேயே நடந்து முடிந்திருக்கிறது என்றும் சொல்கிறார்.

“இதுவரை 15 இயக்குநர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். அதன் காரணமாக ஒவ்வொரு படமும் எனக்குப் பாடமாகவே அமைந்தன. தேவையான பயிற்சிகள், அனுபவங்கள் கிடைத்துள்ளன.

“மோகன்ராஜா, நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு, சமுத்தரக்கனி போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றும்போது திரையுலகின் இன்னொரு அழகியலைக் கற்றுக்கொள்ள முடிகிறது,” என்கிறார் சஞ்சிதா.

நல்ல கதாபாத்திரம், நல்ல கதை, நல்ல படக்குழு ஆகியவை இருந்தால் மட்டுமே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறாராம். நல்ல நடிகை என்ற பெயரை சம்பாதிக்கத்தான் இத்தனை ஆண்டுகாலமாக திரையுலகில் ஓய்வெடுக்காமல் உழைத்து வருவதாகக் கூறுகிறார்.

அதிக சம்பளம், வணிக படங்களின் நாயகி, கதாநாயாகியாக மட்டுமே நடிப்பது என்பதில் எல்லாம் தமக்கு அறவே விருப்பம் இல்லை என்கிறார்.

“15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும், திரையுலகில் எனக்கான பல சவால்கள் காத்திருக்கின்றன. நம்மை நாமே நிருபிக்க வேண்டிய கட்டாயம் அவ்வப்போது ஏற்படுகிறது.

“நான் எப்படிப்பட்டவள் என்பதை பிறர் முடிவு செய்வதைக் கண்டு கோபப்பட்டிருக்கிறேன். திரையுலகில் தொடர்ந்து நமக்கான ஓர் இடத்தை தக்க வைத்துக்கொள்வதே பெரிய சவால்தான். அந்த வகையில் என்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம்.

“ஏனெனில் ‘தில்லாலங்கடி’ போன்ற ஒரு படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. தொடர்ந்து ‘சூதுகவ்வும்’, ‘பிட்சா 2’, ‘விநோதய சித்தம்’ என்று அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் அமைந்து எனக்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

“திரையுலகில் ஒரு நடிகை தன்னை நிருபிக்கக் கிடைக்கும் கால அவகாசம் மிகக் குறைவு. சவால்களுக்கு இடையே சர்ச்சை, பிரச்சினைகள் என அனைத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். இது எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் நடிகையின் வாழ்க்கையில் அவ்வளவு எளிதானதல்ல.’

“நான் யார் என்பது எனக்குத் தெரியும். அதனால் எதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. என்னுடைய நடிப்பு குறித்து வரும் நல்ல விமர்சனங்களை நிச்சயமாக காதுகொடுத்துக் கேட்பேன்.

“தேவையின்றி நம்மை தனிப்பட்ட முறையில் தாக்கி, நமது அந்தரங்கத்தில் தலையிடுபவர்களுக்கு நாம் பதில் கொடுக்க தேவையில்லை. அவர்களிடம் எதையும் நிருபிக்க அவசியமும் இல்லை,” என்று சொல்லும் சஞ்சிதா ஷெட்டி, கிசுகிசுக்கள் குறித்தும் கவலைப்படுவதில்லை என்கிறார்.

பெரும்பாலான கிசிகிசுக்கள் பொய்யானவை என்பது ரசிகர்களுக்கு நன்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், சராசரி ரசிகர்கள் கிசுகிசுக்களை படிப்பதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடாது என்கிறார்.

“என்னைப் பொறுத்தவரை செய்திகளை வெளியிடுவோர் அது உண்மைதானா என்பதைக் கண்டறிய குறைந்தபட்சம் அடிப்படை ஆய்வை செய்துபார்க்க வேண்டும் என்று குறிப்பிடும் சஞ்சிதா, சில ஊடகங்கள் உண்மையான அக்கறையுடன் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதாக சொல்கிறார்.’

தற்போது அமீர், வெற்றிமாறன், சமுத்திரக்கனி என ஒரே சமயத்தில் மூன்று இயக்குநர்களுடன் நடித்துள்ளார் சஞ்சிதா. இப்படி ஒரு சூழல் வாய்க்கும் என தாம் அறவே நினைத்து பார்க்கவில்லை என்கிறார்.

“‘மாயவலை’ படத்தில் முதல் காட்சியை வெற்றிமாறன்தான் படமாக்கினார். அவரது இயக்கத்தில் திரையின் ஓர் ஓரத்தில் என் முகம் தெரிந்தால்கூட போதும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால் எதிர்பாராத வகையில் அவர் நான் நடிக்கும் காட்சியை இயக்கினார். அதே போன்றுதான் இயக்குநர் சமுத்திரக்கனியுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எதிர்பாராத வகையில் அமைந்தது.

“அமீருடன் நடித்தால் நடிப்பின் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்ள முடியும். இயக்குநர் சொல்வதை எப்படி உள்வாங்க வேண்டும் ஒரு கதாபாத்திரத்துக்கு எப்படி எல்லாம் வடிவம் கொடுக்க வேண்டும் என்பதை அவர் மூலம் தெரிந்து கொண்டேன்,” என்கிறார் சஞ்சிதா.

“எனது கனவு படம், கதாபாத்திரம் குறித்து அடிக்கடி கேட்கப்படுகிறது. ஒரு திரைப்படம் முழுவதும் நான் வரவேண்டும். என்னைச் சுற்றி மட்டுமே சுழலக்கூடிய கதையாக இருக்க வேண்டும். இந்த விருப்பத்தை சாத்தியமாக்கும் பிரபலங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்க ஆசை.

“வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும்,” என்று தனது கனவுகளை அடுக்குகிறார் சஞ்சிதா.

குறிப்புச் சொற்கள்