காலஞ்சென்ற நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி ‘நேசிப்பாயா’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி உள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
முழுநீள காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யாவும் நடிகை நயன்தாராவும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பல ஆண்டுகளாக திரையுலகில் நீடித்து வரும் நயன்தாரா, நீண்ட இடைவெளிக்குப்பிறகு திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அரங்கத்தில் இருப்பவர்களை ஆச்சரியப்பட வைத்தது.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆகாஷ் முரளிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் நாயகி அதிதி சங்கரை தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
“நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போவதில்லை. ஆனால் இது ஒரு வகையில் சிறப்பான படம். இயக்குநர் விஷ்ணுவர்த்தனை பல ஆண்டுகளாகத் தெரியும். அவரும் என் குடும்ப உறுப்பினர் போன்றவர்தான்.
“அதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. மேலும், அதிதி சங்கர் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவர் மிகுந்த திறமைசாலி என்பதை அறிவேன்.
“ரசிகர்களுக்கு ஒரு அழகான காதல் கதையை திரையில் பார்க்கும் வாய்ப்பு அமைய உள்ளது,” என்றார் நயன்தாரா.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து பேசிய படத்தின் நாயகனும் நடிகர் அதர்வாவின் இளைய சகோதரருமான ஆகாஷ் முரளி, நயன்தாராவுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
“நடிக்கத் தொடங்கிய புதிதில் நடுக்கமாக இருந்தது. ஆனால் நயன்தாரா, இயக்குநர் விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் என்னை ஆசுவாசப்படுத்தினர்.
“இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் என் மீது அக்கறை வைத்துள்ளனர்.
“யுவன்சங்கர் ராஜா இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மாவும் அண்ணனும் வந்திருக்கிறார்கள். அண்ணனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்,” என்றார் ஆகாஷ் முரளி.