‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை மேகா ஆகாஷ்.
பட நாயகன் விஜய் ஆண்டனி, இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட படக்குழுவினர் தம்மை அன்பாக நடத்தியதாவும் இப்படத்தில் நடித்த அனுபவங்களை வாழ்நாளில் மறக்க இயலாது என்றும் மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்புக்காக டாமன் டையூ சென்றிருந்ததாகவும் அங்கு தாம் கண்ட இயற்கைக் காட்சிகள் தம்மைச் சிலிர்க்க வைத்ததாகவும் சொல்கிறார் மேகா.
“மேலும், முன்பு நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்த அனுபவங்கள் மனத்தில் நிழலாடின. டாமன் பகுதியில் உள்ள ஓர் உயர்தர சொகுசு விடுதியில் அனைவரும் தங்கி இருந்தோம். அங்கே கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கான வசதிகள் உள்ளன. வழக்கமான சொகுசு அறைகளும் உண்டு.
“கூடாரங்கள் அமைத்து தங்குவது அதுவே முதன்முறை என்பதால் ஒரு மாணவியைப் போன்று உற்சாகம் அடைந்தேன். இரவு நேரத்தில் கூடாரங்களில் அமர்ந்து உணவு அருந்தியபடியே தூரத்தில் உள்ள ஒரு கோட்டையைப் பார்த்து ரசித்தோம்.
“இரவு முழுவதும் அந்தக் கோட்டை விளக்கொளியில் மின்னும். மேலும் டாமன் கடற்கரைப் பகுதியும் மிக அழகாக காட்சி அளிக்கும்,” என்கிறார் மேகா.
படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் ஓய்வின்போது டையூவில் உள்ள சிறிய உணவகங்களுக்கும் கடைகளுக்கும் சென்றாராம். சிறிய உணவகங்கள் என்றாலும், அங்கு தயாரிக்கப்பட்ட உணவுகள் அருமையாக இருந்ததாகப் பாராட்டுகிறார்.
“படப்பிடிப்புக்கு என் தாயாரும் வந்திருந்தார். இருவருமாக கடைத்தெருவுக்குச் சென்று பிடித்த துணிமணிகளை வாங்கிக்கொண்டோம்.
தொடர்புடைய செய்திகள்
“எனினும், அதிக நேரம் கிடைக்காததால் நான் குறிப்பிட்ட கோட்டைக்குள் சென்று சுற்றிப்பார்க்க முடியவில்லை. அதே போல் கடற்கரையிலும் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை.
“விஜய் ஆண்டனியைப் பொறுத்தவரை மிக எளிமையான மனிதர் என்று அனைவருக்கும் தெரியும். படக்குழுவிலுள்ள அனைவரைப் பற்றியும் அடிப்படை விவரங்களைத் தெரிந்துகொள்வார். எப்போதுமே அமைதியாகக் காணப்படும் அவரை, பொறுமையின் சிகரம் என்று குறிப்பிடலாம்.
“தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர் மிக அமைதியாகவும் பொறுமையாகவும் பதில் அளிப்பதை ரசிப்பேன். ஓர் உணவகத்தில் இருவரும் அமர்ந்து சாப்பிடும் காட்சி படமாக்கப்பட்டது.
“இருவரும் நீண்ட விவாதத்தில் ஈடுபடுவோம். அப்போது நான் பேசிய சில வசனங்களுக்கு பதில் தரும் வகையில் அவர் அமைதியாய் இருப்பார்.
“அதற்காக அவர் வெளிப்படுத்திய உடல்மொழியும் வசனம் பேசும் பாங்கும் மிகவும் கவர்ந்தன,” என்று சொல்லும் மேகா, தமிழில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமையும் என நம்புகிறாராம்.

