கள்ளச்சாராய தொழில், விற்பனையை மையமாக வைத்து உருவாகி உள்ளது ‘பிறந்த நாள் வாழ்த்துகள்’ படம்.
இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் அப்புக்குட்டி. நாயகியாக ஐஸ்வர்யா அனில் நடித்துள்ளார்.
மேலும் மேத்யூ, ஸ்ரீஜா, சந்தோஷ் சுவாமிநாநன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாளத்தில் பிரபலமாக உள்ள ரஜூ சந்திரா இப்படத்தை இயக்குகிறார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து ஊடகங்களில் நாள்தோறும் புதுப்புதுத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்தப் படமும் அத்தகைய ஒரு துயரச்சம்பவத்தை அலசும் வகையில் உருவாகி உள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர் ரஜூ சந்திரா.
சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவை அருகே உள்ள மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உயிரிழந்தனர்.
அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து கள்ளச்சாராய தொழிலில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள், அப்பாவி மக்களின் வாழ்க்கையை அது எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதைச் சொல்லும் படமாக இது உருவாகி உள்ளது. விரைவில் படம் வெளியாகும்.
அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகச் சொல்கிறார் இயக்குநர் ரஜூ சந்திரா.

