செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்துவிடும் நிலை ஏற்பட்டால் அது குறித்து கவலைப்படப் போவதில்லை என்கிறார் விஜய் ஆண்டனி.
அத்தகைய சூழலில், விவசாயத்தில் கவனம் செலுத்துவதே எனது திட்டம் என்று அண்மையப் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மில்டனுடன் இணைந்து பணியாற்ற இருந்ததாகவும் ஆனால் அது கைகூடவில்லை என்றும் சொல்கிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில், இருவரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
“செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்று. மனித ஆற்றல், உழைப்பு வீணடிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இது போன்ற வீணடித்தலைத் தடுக்கிறது. மனித குலத்தை இந்த தொழில்நுட்பம் ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடும் என்பது சரியல்ல.
“உதாரணமாக ஒரு திரைப்படப் பாடலை எடுக்க விரும்புவதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாடலை ஒருவர் கண்டிப்பாக பாடித்தான் ஆக வேண்டும். அதன்பிறகு தான் அப்பாடலில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து திட்டமிட முடியும்,” என்கிறார் விஜய் ஆண்டனி.
புதிய தொழில்நுட்பங்களுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மிதிவண்டியில் இருந்து, மோட்டார் சைக்கிளுக்கு மாற மனிதர்கள் அதிக காலம் யோசிக்கவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்.
இசைத்துறையில் சாதிக்க விரும்பும் இளையர்கள் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்துபவர், நீண்டகால திரை இசைப் பயணத்துக்கு பின்னணி இசையில் கவனம் செலுத்துவது மிக அவசியம் என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டியது இசையமைப்பாளரின் கடமை. பின்னணி இசை என்று வரும்போது கதை தொடர்பான புரிதல் தேவை. இசையமைப்பாளர் இளையராஜாவின் பின்னணி இசையை கவனித்தால் இது புரியும்.
“அவரது படங்கள் இசையமைப்பாளர்களுக்கான அனைத்து பாடங்களையும் கற்றுத்தரக் கூடியவை. பொதுவாக வயது வித்தியாசம் அதிகமாக உள்ள காதலை தவறான உறவாக நம்மில் பலர் சித்திரிப்பதுண்டு. ஆனால் ‘முதல் மரியாதை’ படத்தில் இளையராஜா அத்தகைய உறவையும் நல்ல காதலாக நியாயப்படுத்தி இருப்பார்,” என்கிறார் விஜய் ஆண்டனி.
‘மழை பிடிக்காத மனிதன்’ படம் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகி உள்ளது.
எனினும், மனித நேய கோட்பாடுகளை வலியுறுத்தும் கருத்துகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறா் விஜய் ஆண்டனி.
“வில்லன் கதாபாத்திரத்தை எதிர்ப்பதும் சமூக விரோதிகளை ஒழிப்பதும்தான் கதாநாயகனின் வேலை என்று கருதப்படுகிறது. ஆனால், இது சரியான புரிதல் அல்ல.
“ஒருவன் எதற்காக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறான், எதற்காக நமது கவனம் தவறாக திசைதிரும்பியது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
“இந்தப் படத்தில் என்னுடன் சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மேகா ஆகாஷ் ஆகியோரும் இணைந்துள்ளனர். அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்,” என்கிறார் விஜய் ஆண்டனி.

