கடந்த வருடம் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகிலும் பிரபலமாகி வருகிறார் தென்னிந்திய நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. திரையுலக வட்டாரத்தில் மட்டுமன்றி, ரசிகர்களிடமும் எந்தவித பந்தாவும் இன்றி பழகி வருகிறார்.
இதனால், அவரது ரசிகர்கள் வட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் உரையாடி வரும் அவர், அவர்களைக் குஷிப்படுத்தும் விதமாக சில காணொளிகளையும் வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த ராஷ்மிகா, அதில் தனது தாய்மொழியான கொடவா பாஷையில் பேசியிருந்தார்.
கர்நாடகா மாநிலத்தின் குடகு மலையோரம் உள்ள கூர்க் பகுதியைச் சேர்ந்தவர் ராஷ்மிகா. அவர் பேசிய பாஷை புரியாத பல ரசிகர்கள் இது என்ன பாஷை, எந்த ஊர் மொழி எனக் குழப்பத்துடன் கருத்துகளைப் பதிவிட்டனர்.
இதுகுறித்து ராஷ்மிகா அளித்துள்ள விளக்கத்தில், “நீங்கள் அனைவரும் குழம்பிப்போயுள்ளது தெரிகிறது. இது எனது தாய்மொழியான கொடவா பாஷை. குடகு பகுதியில்தான் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே. என் வாழ்க்கை முழுவதும் நான் கொடவா பாஷையைத் தான் பேசி வருகிறேன். பேசும்போது எவ்வளவு அழகாக ஒலிக்கிறது பாருங்கள்,” என்று கூறியுள்ளார்.

