அனைத்துலக அளவில் புகழ்பெற்ற வர்த்தகப் பத்திரிகையான ‘ஃபோர்ப்ஸ்’, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பற்றியும் அதிக அளவில் சொத்துகளை வைத்துள்ள நடிகர்கள் பற்றியும் பட்டியல் வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு இறுதி நிலவரத்தின்படி கிடைத்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அதன்படி கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முந்தியுள்ளார் இளைய தளபதி நடிகர் விஜய்.
விஜய் ரூ.474 கோடி
இந்திய பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நடிகர் விஜய், தமிழ் சினிமா உலகின் வசூல் சக்ரவர்த்தியாக விளங்குகிறார். விஜய்யின் நிகர சொத்து மதிப்பு 474 கோடி ரூபாய்.
தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களில் முதல் பணக்கார நடிகர் என்ற பெருமையையும் விஜய் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய். ஒரு படத்திற்கு ரூ.130 முதல் ரூ.250 கோடி வரை பெறுகிறார்.
கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படம் 300 கோடி ரூபாயையும் ‘லியோ’ படம் 612 கோடியையும் வசூலித்திருப்பது விஜய்யின் எதிர்காலத்தை பிரகாசமாகக் காட்டியுள்ளது.
ரஜினிகாந்த் ரூ.430 கோடி
தொடர்புடைய செய்திகள்
கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் நிகர சொத்து மதிப்பு 430 கோடி ரூபாய். அவரது உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்றது. ஒரு படத்திற்கு தோராயமாக ரூ.115 கோடி முதல் ரூ.270 கோடி வரை பெறுகிறார். இந்திய அளவில் ஏழாவது பணக்கார நடிகராக இவர் விளங்குகிறார்.
ஷாருக் கான் ரூ.6,300 கோடி
தனது மொத்த சொத்து மதிப்பில் மற்ற நடிகர்களால் எளிதில் எட்டமுடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார் ஷாருக் கான். இவரது சொத்து மதிப்பு ரூ.6,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஷாருக் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘ஜவான்’, ‘பதான்’ ஆகிய படங்கள் 2,000 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்துள்ளதால் அவரது மொத்த மதிப்பு இப்போது இன்னும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சல்மான் கான் ரூ.2,900 கோடி
ஷாருக் கானுக்கு அடுத்ததாக அதிக அளவில் சொத்துகளைச் சேர்த்துள்ளார் நடிகர் சல்மான் கான். ஆனால், ஷாருக் கானின் சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், 2வது இடத்தில் உள்ள சல்மான் கான் இன்னும் அதில் பாதியைக்கூட எட்டவில்லை எனத் தெரிகிறது. அவரது நிகர சொத்து மதிப்பு 2,900 கோடி.
அக்ஷய் குமார் ரூ.2,500 கோடி
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் நடிப்பில் வெளிவந்த ‘ஓஎம்ஜி 2’ உள்ளிட்ட படங்கள் சரியாகப் போகவில்லை. இருந்தாலும், 2,500 கோடி ரூபாய் நிகர சொத்துகளுடன் இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார் அக்ஷய் குமார்.
அமீர் கான் ரூ.1,862 கோடி
‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தை தனது எதிர்பார்ப்பு மிக்க படமாக நம்பியுள்ளார் அமீர் கான். படங்கள் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் அவரது சொத்து மதிப்பு 1,862 கோடி ரூபாய் என்ற கணக்கில் வலுவாக உள்ளது. இந்திய நடிகர்களில் நான்காவது இடத்தில் இவர் இருக்கிறார்.
அல்லு அர்ஜுன் ரூ.350 கோடி
தெலுங்குப் பட உலகம் மட்டுமே அறிந்திருந்த அல்லு அர்ஜுன், ‘புஷ்பா’ படத்துக்குப் பிறகு ‘பான் இந்தியா’ நாயகனாக உயர்ந்திருக்கிறார். இவ்வாண்டு இறுதியில் வெளிவரவுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் அல்லு அர்ஜுனின் நிலவரத்தை மேலும் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆறாவது பணக்கார நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனின் இப்போதைய நிகர சொத்து மதிப்பு 350 கோடி ரூபாய்.
பிரபாஸ், அஜித், கமல்ஹாசன்
இந்தப் பட்டியலில் ஐந்தாவது நடிகராக விஜய்யும், ஏழாவது நடிகராக ரஜினிகாந்தும் ரூ.241 கோடி சொத்துகளுடன் ‘பாகுபலி’ பிரபாஸ் எட்டாவது இடத்திலும் ரூ.196 கோடி சொத்துகளுடன் அஜித் 9வது இடத்திலும் ரூ.150 கோடி சொத்துகளுடன் கமல்ஹாசன் 10வது இடத்திலும் இருக்கின்றனர்.