புரட்சிகர பெண்களைப் பற்றிய பதிவு இது: அஞ்சலி

3 mins read
dba14be8-3446-4a66-9a38-68b15b4733ea
அஞ்சலி. - படம்: ஊடகம்

நடிகை அஞ்சலியின் 50வது படமாக உருவாகிறது ‘ஈகை’. சாதிக்கத் துடிக்கும் இளம் பெண்ணின் போராட்டம் என்பதுதான் இப்படத்தின் ஒரு வரிக் கதைச்சுருக்கம்.

நயன்தாராவுக்கு ‘அறம்’ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதே போல் அஞ்சலிக்கு இந்தப்படம் அமையும் என்கிறார் அறிமுக இயக்குநர் அசோக் வேலாயுதம்.

கதைப்படி, மும்பையில் இருந்து சட்டம் படிப்பதற்காக சென்னை செல்லும் கதாநாயகி அங்கு ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறார். அதை அவர் எவ்வாறு கையாள்கிறார், சட்டப்படிப்பை முடித்தாரா என்பதை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கதை தமக்கு மிகப் பொருத்தமானதாக அமையும் எனக் கருதினாராம் அஞ்சலி. மேலும், அறிமுக இயக்குநர் என்ற போதிலும் அசோக் வேலாயுதம் தம்மிடம் கதை சொன்னவிதம் மிக அருமையாக இருந்ததாகவும் பாராட்டுகிறார்.

“ஒரு படத்தின் கதை என்பது அதைக் கேட்ட அடுத்த நொடியே நடிப்பதற்கான ஆவலைத் தூண்ட வேண்டும். ‘ஈகை’ கதை அத்தகைய உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. அதனால்தான் எந்தவித யோசனையும் இன்றி இக்கதையில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.

“நான் நினைத்தபடியே படப்பிடிப்பு எந்தச் சிக்கலும் சந்தேகமும் இன்றி நடைபெற்றது. இதற்காக இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.

“படக்குழுவைச் சேர்ந்த அனைவருமே உற்சாகமாகப் பணியாற்றினோம்,” என்கிறார் அஞ்சலி.

‘ஈகை’ படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாகவும் பாரதிராஜா, பொன்வண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட மூன்று இயக்குநர்கள் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

‘விருமாண்டி’ பட நாயகி அபிராமியும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, தருண்குமார் இசையமைக்கிறார்.

‘நாம் வாழும் சமூகத்தில் ஏராளமான புரட்சிகரப் பெண்கள் உள்ளனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதைதான் இது. ஆனால் அந்தப் புரட்சிப் பெண்கள் குறித்து அதிக தகவல்கள் வெளிவருவதில்லை. கண்ணுக்குத் தெரியாத அந்தப் பெண்கள் கடைசி வரை நம் கண்களுக்கு அறவே தெரியாமல் வாழ்ந்து, மறைந்து போகிறார்கள்.

“எனவேதான் நம் சமூகத்தில் அங்கீகாரத்துக்காக காத்திருக்கும் பெண்கள் குறித்து இப்படத்தில் பதிவு செய்துள்ளோம்,” என்கிறார் அஞ்சலி.

நாம் கடந்து செல்லும் எத்தனையோ எளிமையான மனிதர்களுக்குள் மிகப்பெரிய வாழ்க்கைப்பதிவு புதைந்திருக்கும் என்றும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை குறித்துத்தான் இந்தப்படம் பேசப் போகிறது என்றும் இயக்குநர் தம்மிடம் தெரிவித்ததாக அஞ்சலி சொல்கிறார்.

“சிலர் நூறு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் எதையும் சாதித்திருக்க மாட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை அந்த மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களோ, முன்னேற்றங்களோ நிகழ்ந்திருக்காது.

“அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை குறித்து பேசுவதுடன் நிற்காமல், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைக்கும் தீர்வு சொல்வதாக இந்தப் படம் அமைந்திருக்கும்,” என்கிறார் அஞ்சலி.

திரையுலகில் அறிமுகமானது முதல், அஞ்சலிக்கு அவரது சித்தி பலவிதமாக உதவி செய்து வந்தாராம். பின்னர் சித்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாராம்.

இந்நிலையில், பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உற்சாகத்துடன் படப்பிடிப்பில் நிம்மதியாக தம்மால் பங்கேற்க முடிகிறது என்கிறார் அஞ்சலி.

தற்போது ஊதியம், கதாநாயகி வேடம் என்றெல்லாம் கறார் காட்டாமல் நல்ல கதாபாத்திரமாக அமைந்தால் எந்தவித நிபந்தனைகளும் இன்றி நடிக்க ஒப்புக்கொள்கிறாராம் அஞ்சலி.

திரையுலகைச் சேர்ந்த அஞ்சலியின் நண்பர்கள் சிலர் அவருக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் மூலம் சில நல்ல வாய்ப்புகள் அமையும் என நம்புகிறார் அஞ்சலி.

இதற்கிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெற்றி பெற்ற படத்தின் மறுப்பதிப்பு உருவாகிறது என்றும் அதில் அஞ்சலி நாயகியாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்