சாப்பிடாமல் உழைத்த இந்தியன் தாத்தா: பாபி சிம்ஹா

3 mins read
94dbd71f-9536-4c3f-8231-368bc4e3d01c
பாபி சிம்ஹா. - படம்: ஊடகம்

‘இந்தியன் 2’ படம் விரைவில் வெளியீடு காண உள்ள நிலையில், அப்படம் குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அப்படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா, அண்மைய பேட்டி ஒன்றில், ‘இந்தியன் 2’ பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்கள், கிராமங்கள் எனப் பல இடங்களுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டோம். முன்பு எங்கு சென்றோம், அடுத்து எங்கு செல்கிறோம் என்று எதையும் நினைவில் வைத்துக் கொள்ள இயலாது. அந்த அளவுக்கு படப்பிடிப்பு நாள்கள் பரபரப்பாக நகர்ந்தன.

“குறிப்பிட்ட நகர் அல்லது சிற்றூரைச் சென்றடைந்தால் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கிவிடும். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவில் இதுவரை பார்த்திராத பல இடங்களை நேரில் கண்டேன்,” என்று கூறியுள்ளார் பாபி சிம்ஹா.

இப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் சுற்றிப் பார்த்த மனநிறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக்குடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததாகவும் இப்படத்தில் இருவரும் இணைந்து வரும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

“படப்பிடிப்புக்கு மத்தியில் ஓய்வு கிடைக்கும்போது நானும் திரு.விவேக்கும் உடனடியாகப் புறப்பட்டுவிடுவோம். படப்பிடிப்பு நடக்கும் நகரத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதில் விவேக் அலாதியான விருப்பம் கொண்டிருந்தார்.

“ஒவ்வொரு ஊரிலும் எந்தக் கோவில் முக்கியமானது, அங்கு சென்று எவ்வாறு வழிபடுவது என அனைத்தையும் அறிந்து வைத்திருந்தார். பக்திக்கு மத்தியில் உணவுப் பிரியராகவும் அவர் இருந்தார். ஒவ்வொரு ஊரிலும் சாலையோர உணவுக்கடைகள், சிறிய, பெரிய உணவகங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்வார். சாப்பிடும் உணவு ஏன் பிரபலமாக உள்ளது, அந்த உணவை எப்படி தயாரிக்கிறார்கள் என்பன போன்ற விவரங்களும் அவருக்கு அத்துப்படி.

“ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை இவ்வாறு சுற்றி வந்தோம்,” என்று விவேக் தொடர்பான நினைவலைகளில் மூழ்கிப் போகிறார் பாபி சிம்ஹா.

கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணைந்து நடித்ததால், தொடக்கத்தில் சற்று பதற்றமாக உணர்ந்தாராம். ஆனால் கமல் தன்னை அமைதிப்படுத்தி நடிக்க வைத்ததாகச் சொல்கிறார்.

“இருவரும் சம்பந்தப்பட்ட முதல் காட்சி படமாக்கப்பட்ட அந்நாளை, எனது வாழ்நாளில் மறக்க இயலாது. அக்காட்சி யில் நான் நேரடியாக அவரது கண்களைப் பார்த்துப் பேச வேண்டியிருந்தது.

“நான் தயக்கத்துடனும் ஒருவிதப் பதற்றத்துடனும் இருப்பதைப் பார்த்துவிட்ட அவர் உடனே என் அருகில் வந்து சில அறிவுரைகளை வழங்கினார். அந்தக் காட்சியில் இருவரும் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதற்கான சில குறிப்புகளையும் அவர் அளித்தார்.

“எனது காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டாலும் நான் ஓய்வெடுக்கவில்லை. முடிந்தவரை கமல்ஹாசன் நடித்த காட்சிகளை அரங்கில் அமர்ந்து கவனித்து வந்தேன்.

“இந்த வயதில் ஒப்பனைக்காக நாள்தோறும் பல மணி நேரங்கள் அவர் செலவிட்டதை அருகில் இருந்து கவனித்தேன். 12 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தாலும் சலித்துக்கொள்ள மாட்டார். ஒப்பனை கலைந்துவிடக்கூடாது என்பதால் உணவு உட்கொள்ள முடியாது.

“ஒரு ‘ஸ்ட்டிரா’வை வைத்து திரவ உணவுகளை மட்டும் உறிஞ்சி பசியைத் தணித்துக்கொண்டார். அவர் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப வெளிப்படுத்தும் கண் அசைவுகள், நடக்கும் பாங்கு உணர்வுபூர்வமான வசனங்களைப் பேசும் விதம் ஆகியவை என்னைத் திக்குமுக்காட வைத்தன.

“பத்து மணி நேரத்துக்கும் மேல் உணவின்றி நடிப்பது அவ்வளவு எளிது அல்ல. கமலைப் போன்று தன்னை ஒரு படைப்புக்காக ஒப்படைத்துக்கொள்ளும் கலைஞருக்கு மட்டுமே இது சாத்தியமாகும்,” என்கிறார் பாபி சிம்ஹா.

படப்பிடிப்பின்போது காலஞ்சென்ற நடிகர் சிவாஜி கணேசன் உடனான நினைவலைகளை கமல் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ள பாபி, ‘தசாவதாரம்’, ’குணா’ படங்கள் குறித்து தாம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் மிக பொறுமையாக பதில் அளித்ததாகச் சொல்கிறார்.

இயக்குநர் சங்கரின் திட்டமிடுதலும் நேர்த்தியான அணுகுமுறையும் தம்மை அசர வைத்ததாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“நேரம் தவறாமை என்பதற்கு திரு.சங்கர்தான் மிகச் சிறந்த உதாரணம் என்பேன். அதே போல் அவரது வேகமான செயல்பாடுகள் மிகவும் பிடிக்கும். குறிப்பிட்ட ஒரு சண்டை, துரத்தல் காட்சியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து அவர் படமாக்கிய விதம் சிலிர்க்க வைத்தது.

“அதே போல் படப்பிடிப்பின் போது அவர் எந்தவித கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியதே இல்லை. புது முகங்களிடம் கூட பொறுமையாகப் சி அவர்கள் மனதில் உள்ள அச்சத்தை நீக்கி நடிக்க வைத்தார். ‘இந்தியன் 2’ படம் குறித்து வாழ்நாள் முழுவதும் பேசிக் கொண்டிருப்பேன்,” என்கிறார் பாபி சிம்ஹா.

குறிப்புச் சொற்கள்