தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை தாமே இயக்கி நடித்துள்ளார் தனுஷ்.
விழாவில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், தனுஷின் அசுர வளர்ச்சியைக் கண்டு தாம் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“முன்பு நாங்கள் இணைந்து நடித்த ஒரு படத்தில், ‘10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வைத்துக்கொண்டு துள்ளிக்கொண்டு இருக்கிறாயா’ என்று தனுஷைப் பார்த்து நான் வசனம் பேசி இருந்தேன். தனுஷ் இன்னும் துள்ளிக்கொண்டுதான் இருக்கிறார். அவரது வளர்ச்சியைக்கண்டு பெருமைப்படுகிறேன். இது அழகான வளர்ச்சி.
“மேலும் ஒரு இயக்குநராகவும் தனுஷ் வளர்ந்து நிற்கிறார். இப்படம் சுவாரசியமான படைப்பாக இருக்கும். குறிப்பாக தனுஷின் வசனங்கள் வரவேற்கப்படும்,” என்றார் பிரகாஷ்ராஜ்.
படத்தின் நாயகி துஷாரா பேசும்போது, தனுஷின் இயக்கத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்றார்.
“தனுஷை நான் செதுக்கியதாகக் கூறுகிறார்கள். அது சரியல்ல. நான் ஒரு கல்லை எடுத்து வைத்த கையோடு சென்றுவிட்டேன். அதன் பின்னர் தனுஷ் தம்மைத்தாமே செதுக்கிக்கொண்டார். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத நல்ல மனம் கொண்டவர் தனுஷ்,” என்றார் இயக்குநர் செல்வராகவன்.

