தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தில் நடிகர் நாகார்ஜூனா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. நாயகி யார் என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.
இந்நிலையில் படக்குழு வெளியிட்ட சிறிய காணொளியில், ராஷ்மிகா ஒரு வனப்பகுதிக்குள் தன்னந்தனியே செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. காட்டுக்குள் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் ஒரு பெட்டியை தோண்டி எடுக்கும் அவர் அதை திறந்து பார்க்கிறார். பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை ஒருவித திகிலுடனும் விழிப்புடனும் பார்க்கும் அவர் அந்த பெட்டியோடு அப்பகுதியில் இருந்து வெளியேறுகிறார்.
இதையடுத்து ‘குபேரா’ படத்தில் ராஷ்மிகா ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இது கொள்ளை தொடர்பான படம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ராஷ்மிகாதான் கொள்ளையடிப்பதாக இன்னொரு தரப்பு கூறுகிறது.
ஆனால் தாம் கொள்ளையடித்த பணத்தை அவரே ஏன் வியந்து பார்க்க வேண்டும் என்று காணொளியை சுட்டிக்காட்டி சிலர் வாதிடுகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறுவதாக இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

