இன்னும் சில ஆண்டுகளில் திரையுலகில் இருந்து விலகப் போவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் நடிகை துஷாரா விஜயன்.
கடந்த 2019ல் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். ஆனால், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் அவர் ஏற்றிருந்த மாரியம்மா பாத்திரம்தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்தது.
இதனைத்தொடர்ந்து, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’, தனுஷ் நடித்து வரும் ‘ராயன்’, சியான் விக்ரம் நடித்துவரும் ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் வெளியாக உள்ளன.
இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “என்னுடைய 35வது வயதில் திரையுலகில் இருந்து நான் வெளியேறி விடுவேன், அதன்பிறகு நடிக்கமாட்டேன். அதுவரை சம்பாதிப்பது போதும் என்று நினைக்கிறேன். 35 வயதுக்குப் பிறகு இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 26 வயது நடைபெற்று வரும் துஷாரா, இன்னும் ஒன்பது ஆண்டுகள் வரை மட்டுமே திரையுலகில் பிரகாசிப்பார் எனத் தனது பேட்டி மூலம் அறிவித்துள்ளார்.