புலனாய்வு அதிகாரி வேடம் சவாலானது: தான்யா

2 mins read
eb8c384b-3750-4c57-98a4-2cbdea529be6
தான்யா. - படம்: ஊடகம்

‘றெக்கை முளைத்தேன்’ படத்தை இயக்கி வரும் இயக்குநர் பிரபாகரன், தனது முந்தைய படைப்புகளைவிட இது மாறுபட்ட படமாக அமையும் என்கிறார்.

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவரது புதிய படத்தில் தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

இதில் அவருக்கு மாறுபட்ட கதாபாத்திரம் அமைந்திருப்பதாகக் குறிப்பிடும் பிரபாகரன், அதைப் பயன்படுத்தி தனது நடிப்புத் திறமையை தான்யா அழகாக வெளிப்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார்.

“நான்கு நண்பர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் காலெடுத்து வைக்கிறார்கள். அப்போது இவர்களை மையப்படுத்தி ஒரு துயரச்சம்பவம் நிகழ்கிறது.

“அதிலிருந்து மீண்டுவரப் போராடும் நிலையில், காவல்துறை அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறது. தான்யா ரவிச்சந்திரன் புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார்.

பள்ளி நண்பர்களாக நான்கு புது முகங்களை அறிமுகப்படுத்துகிறாராம். மேலும் ஜெயப்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று தங்களுடைய பங்களிப்பை குறைவின்றி அளித்துள்ளதாகப் பாராட்டுகிறார் பிரபாகரன்.

தரண்குமார் இசையமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவைக் கவனித்துக்கொள்ள, பிஜு டான்பாஸ்கோ படத்தொகுப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படம் வெளியானது. அதன் பிறகு சில படங்களை இயக்கி உள்ளார்.

“அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ‘றெக்கை முளைத்தேன்’ என்ற வார்த்தைகளுடன் தொடங்கும். இந்தப் புதிய படத்துக்கு இதுவே பொருத்தமான தலைப்பாக இருக்கும் எனத் தோன்றியது.

“பலரிடம் கருத்து கேட்டபோது எல்லாருமே பொருத்தமாக இருப்பதாகக் கூறினர்,” என்று விவரம் பகிரும் பிரபாகரன், ‘றெக்கை முளைத்தேன்’ படத்தைச் சொந்தமாகத் தயாரிக்கிறார்.

எதிர்பாராத ஒரு நாளில் திடீரென பிரபாகரன் அலுவலகத்தில் இருந்து தொடர்புகொண்டு அவரது படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தனர். ஸ்டோன் எலிஃபெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி உள்ளார்.

புலனாய்வு அதிகாரியாக நடிப்பது சவாலானது என்று குறிப்பிட்டுள்ள அவர், படப்பிடிப்பின்போது இந்த வேடத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்ததாகவும் கூறுகிறார்.

“இதுவரை கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது. எனவே இம்முறை நகரத்துப் பின்னணியில் கதைக்களத்தை அமைத்துள்ளார்.

“இந்தப் புது முயற்சியில் எனக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கதாபாத்திரத்துக்காக என்னால் இயன்ற அளவு மெனக்கெட்டேன். அதற்கான பலன் படம் வெளியான பிறகு தெரிய வரும்,” என்கிறார் தான்யா ரவிச்சந்திரன்.

இவரைப் பொறுத்தவரை பிற மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், தமிழில் பெயர் வாங்க வேண்டும் என்றுதான் விரும்புகிறாராம். தனது தாத்தாவும் பழம்பெரும் நடிகருமான ரவிச்சந்திரனுக்கு உள்ள நற்பெயரைக் காப்பாற்றுவது தமது கடமை என்கிறார்.

குறிப்புச் சொற்கள்