தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக சில நடிகர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சில முன்னணி நாயகர்கள், நடிகர்கள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்களின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
சில நடிகர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்கள் எந்தவித விசாரணையும் இன்றி நிலுவையில் உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடிகர்கள் அதிக ஊதியம் பெறுவது, கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
எனினும் எந்தெந்த நடிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தயாரிப்பாளர் சங்கம் வெளியிடவில்லை.
நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கும் படங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை 115 படங்கள் தமிழில் வெளியாகி உள்ளன. அவற்றுள் 4 படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்துள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பு கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
எனவே, முன்னணி நடிகர்கள் ஊதியத்தைக் குறைக்க வேண்டும் என்ற வழக்கமான கோரிக்கையையும் தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், நடிகர் சங்கத்தில் தற்போது உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அச்சங்கம் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

