திரைப்பயணத்தின் மைல்கல் ‘கல்கி’: அன்னா பென்

திரைப்பயணத்தின் மைல்கல் ‘கல்கி’: அன்னா பென்

3 mins read
7258c6ec-9f9e-4f20-a135-7f4900fac854
நடிகை அன்னா பென். - படம்: ஊடகம்

‘கல்கி’ திரைப்படம் தனது திரைவாழ்வின் முக்கிய மைல்கல்லாக அமைந்ததை நினைத்து உள்ளம் பூரித்துப் போவதாகச் சொல்கிறார் நடிகை அன்னா பென்.

‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘கப்பெல்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அன்னா பென்.

இவரது நடிப்பில் வெளியான ‘ஹென்னா’ திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அப்படம் தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் மறுபதிப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து, ‘கொட்டுக்காளி’ படத்தில் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இப்படம், விரைவில் வெளிவர உள்ளது. சூரி நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான ‘கல்கி’ திரைப்படத்தில் கைரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அன்னா பென். சில காட்சிகளில் மட்டுமே அவர் வந்திருந்தாலும் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

இந்த நிலையில், ‘கல்கி’ திரைப்படத்தின் அனுபவங்கள் குறித்து அவர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னைத் தேடி இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைரா கதாபாத்திரம் வந்தது. அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்.

“இந்த வாய்ப்பு என் திரைவாழ்வில் மைல்கல்லாக இருக்கும் என்பதையும் அறிந்திருந்ததால் கிடைத்த வாய்ப்பு கை நழுவிப் போய்விடாமல் கண்ணும் கருத்துமாக இருந்தேன். அனைத்து நன்றிகளும் இயக்குநர் நாக் அஸ்வினுக்குத்தான் போய்ச் சேரும்.

“மிகச் சாதாரணமாக இந்தியாவின் பிரம்மாண்ட படமொன்றை இயக்கிவிட்டார்,” எனப்பெருமிதம் கொள்ளும் அன்னா பென், இந்தியச் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கு மத்தியில் தனக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது வாழ்நாளில் மறக்கமுடியாதது என்கிறார்.

“கல்கி’ பயணத்தில் எனது பங்களிப்பும் இருந்ததை நினைத்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். கைரா எனக்களித்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்.

“நிறைய சொல்ல ஆசைப்படுகிறேன். ஆனால், சொல்லமுடியவில்லை. இன்னும் நான் திகைப்பான மனநிலையில் தான் இருந்துவருகிறேன்,” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, ‘கல்கி’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், உலகளவில் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் வசூல் ரூ.900 கோடியை தாண்டியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இதனால், இப்படம் இன்னும் சில நாள்களில் ரூ.1,000 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“என் அப்பா பென்னி திரைக்கதை எழுத்தாளர். அவர் நிறைய தமிழ்ப்படங்களும் பார்ப்பார். அவரோடு சேர்ந்து நானும் பார்ப்பேன். இந்த இயக்குநர், அந்த நடிகர் என எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்ல ஒரு படப்பிடிப்புக் குழுவினரோடு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன்,” என்று அன்னா பென் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்