திரையுலகில் அறிமுகமான பின்னர் பல்வேறு ஏமாற்றங்களுக்கும் கேலிக்கும் ஆளானதாகச் சொல்கிறார் இளம் நாயகி ஷாலினி பாண்டே.
தனது அறிமுகப் படத்திலேயே முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட படம் ‘மகாராஜா’. ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் அறிமுகமானபோது தாம் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை என்றும் பிறரது விமர்சனத்துக்கு மட்டுமே ஆளானதாகவும் சொல்கிறார் ஷாலினி.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், அண்மைய பேட்டியில் தாம் உருவ கேலிக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளார் ஷாலினி.
“இப்போது திரையுலகத்தைப் பற்றி எனக்கு ஓரளவுக்கு விவரங்கள் தெரியும். திரையுலகில் கதாநாயகி யாக வெற்றி வலம்வர உடலை முறையாக கவனிக்க வேண்டும்.
“தொடக்க காலத்தில் என்னை உடல் பெருத்து இருப்பதாக நிறைய பேர் கிண்டல் செய்தனர். ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் அறிமுகமானபோது எதிர்கொண்ட கேலிவதை குறித்து இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேதனையாக உள்ளது,” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் ஷாலினி.
என்னதான் ஒரு தரப்பினர் இவரை வம்புக்கு இழுத்தாலும், மற்றொரு தரப்பு ஆதரவாக இருந்துள்ளது. எனவே தனது நலம் விரும்பிகளின் அறிவுரைகளை மட்டுமே கேட்டுச் செயல்படுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்தித்த சிலர், தினமும் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து விவரித்தனர்.
“உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது தோற்றத்துடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, அது உடல்நலத்துடன் தொடர்புடையது,” என்கிறார் ஷாலினி.
தமக்கு இந்தி மொழி நன்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தென்னிந்திய திரையுலகில் மொழி தெரியாமல் சிக்கல்களை எதிர்கொண்டதாகச் சொல்கிறார்.
“தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய வந்தன. ஆனால் எனக்கு மாநில மொழிகள் தெரியாது.
“இந்தச் சூழ்நிலையில் என்னிடம் மேலாளராகப் பணியாற்றிய ஒருவர் பல வகையிலும் ஏமாற்றிவிட்டார். இதனால் மனம் உடைந்து போனேன்.
“இதிலிருந்து மீண்டுவர எனக்கு அதிக காலம் தேவைப்பட்டது. எனது குடும்பத்தார் பக்கபலமாக இருந்தனர். எனது தோழிகளும் எனக்கு நம்பிக்கையூட்டி பக்கபலமாக இருந்தனர்.
“நமக்கு மிகவும் நம்பகமாக இருப்பவர்கள், திடீரென நம்மை ஏமாற்றும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாது. எனது வாழ்க்கையில் இதுதான் நடந்துள்ளது,” என்கிறார் ஷாலினி.
அந்தக் கடினமான காலகட்டத்தில் தமது குடும்பத்தினர்தான் ஆதரவாக இருந்தனர் என்றும் கூறுகிறார்.
எனவே அனைவரும் தங்கள் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், குடும்பத்தினரைத் தவிர வேறு யாராலும் தமக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சினிமா ஆசையால் தனது குடும்பத்தாரை எதிர்த்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவர் ஷாலினி.
“அதன் பிறகு நிறைய சோதனைகளை எதிர்கொண்டேன். அப்போதுதான் குடும்பத்தின் அருமை என்னவென்று எனக்குப் புரிந்தது. இப்போது எனது குடும்பத்துடன் இணைந்து விட்டேன். வீட்டில் என் தந்தை உள்ளிட்ட அனைவரும் என் மீது மிகுந்த பாசமும் அக்கறையும் கொண்டுள்ளனர்.
“அதேபோல் மேலும் என்னை ஒதுக்கி வைத்த பலர் இப்போது நான் அடைந்துள்ள உயரத்தைக்கண்டு பெருமைப்படுவார்கள் என நினைக்கிறேன்,” என்கிறார் ஷாலினி.