இந்தித் திரையுலகில் தென்னிந்திய கலைஞர்களின் மவுசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் மூலம் இந்திப் படங்களுக்கு தென்னிந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஒரு பக்கம் இருக்க, தமிழ்த் திரைப்படங்களும் வட இந்தியாவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
‘பான் இந்தியா’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில மக்களும் பார்க்கும் வகையில் பல மொழிகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடிக்கும் படங்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகின்றன.
இதனால் தென்னிந்தியாவில் வெளியாகும் இந்திப் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இத்தகைய ‘பான் இந்தியா’ இந்திப் படங்களில் நடிக்க தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் ஆகியோர் நேரடி இந்திப் படங்களிலும் ‘பான் இந்தியா’ இந்திப் படங்களிலும் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரஜினியைப் பொறுத்தவரை 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்திப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பொதுவாக தென்னிந்திய கலைஞர்களை இந்தி திரையுலகில் நிலையான இடத்தைப்பிடிக்க அனுமதிக்காமல் ஒருதரப்பினர் மறைமுக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், ரஜினிகாந்துக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
காரணம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் பலத்த வரவேற்பைப் பெறுகின்றன. அதனால் பாலிவுட் கதாநாயகர்கள் ரஜினி தங்கள் படங்களில் நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு காலத்தில் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வசூல் மன்னனாகத் திகழ்ந்த சல்மான்கான், அமீர்கான் ஆகியோர் அண்மைக் காலத்தில் எந்த வெற்றிப்படத்தையும் தரவில்லை.
‘ஜவான்’ இந்திப்படம் ஷாருக்கானுக்கு தற்காலிகமாக நிம்மதி அளித்தது. அதன் பின்னர் வெளியான அவரது படம் பெரிதாகப் பேசப்படவில்லை. இதன் மூலம் இந்தி தயாரிப்பாளர்கள் ‘பான் இந்தியா’ படங்களைத் தயாரிக்க விரும்புகிறார்கள். தென்னிந்திய கலைஞர்கள் பங்கேற்கும்போது ஒவ்வொரு திரைப்படத்துக்கும் குமரி முதல் காஷ்மீர் வரை என வியாபாரச்சந்தை விரிவாகிறது.
இந்தியில் சாதிக்க வேண்டும் என்ற முடிவோடு மும்பையில் குடியேறியுள்ளனர் சூர்யா, ஜோதிகா தம்பதியர். சென்னை போயஸ் தோட்டத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவிட்டு வீடு கட்டியுள்ள தனுஷ் ஒருபடி மேலே சென்று இந்தி, ஹாலிவுட் படங்களில் நடிக்க விரும்புகிறார்.
இந்தியில் அவர் கதாநாயகனாக நடிப்பது அங்குள்ள இளம் நாயகர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதியும் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.
கத்ரினா கைப்புடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ஷாருக்கானுடன் ‘ஜவான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அவர், இந்தி இணையத்தொடர் ஒன்றில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
இதற்கிடையே மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், யஷ் உள்ளிட்ட தெலுங்கு நாயகர்களும் பாலிவுட் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி உள்ளனர்.
நடிகர் பிரபாசும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு அவருக்கென தனி மதிப்பு உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இந்தி ரசிகைகளையும் மெல்ல வசப்படுத்தி வருகிறார்.
ஆக மொத்தத்தில், தென்னிந்திய கலைஞர்கள் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளனர். மேற்குறிப்பிட்ட கதாநாயகர்கள் நடிப்பதாக இருந்தால், பல நூறு கோடி ரூபாய் பணத்தைக் கொட்டி படம் தயாரிக்க சில முன்னணித் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதுவும் இந்தித் திரையுலகத்தினரை மலைத்துப்போக வைத்திருக்கிறது.

