‘இந்தியன்-2’ தாத்தாதடுமாறுகிறார்

‘இந்தியன்-2’ தாத்தாதடுமாறுகிறார்

2 mins read
85c1e72e-530b-4f36-9e6c-5820d1ad219d
இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வேகத்தில் வசூலில் குவிக்கவில்லை என்று தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - படம்: தமிழக ஊடகம்

ஷங்கர் இயக்கி, கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ தாத்தா முதல் மூன்று நாள்களில் ரூ.72 கோடி மட்டுமே வசூலாகி தடுமாறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இம்மாதம் 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியீடு கண்டது.

வெளியீடு கண்ட முதல் நாளான வெள்ளிக்கிழமை அன்று இப்படம் ரூ.30.75 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து வார இறுதி நாள்களான சனிக்கிழமை ரூ.20 கோடியும் ஞாயிற்றுக்கிழமை ரூ.18.50 கோடியும் வசூலித்துள்ளது. மூன்று நாள்களும் வசூல் நாளுக்கு நாள் குறைந்தது.

இதன்படி முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.72.25 கோடி ‘இந்தியன் 2’ திரைப்படம் வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்படம் முதல் மூன்று நாளில் ரூ.36 கோடி மட்டுமே வசூலானதாகக் கூறப்படுகிறது. இது, கமல்ஹாசனின் முந்தைய படமான ‘விக்ரம்’ படத்தின் கிட்டத்தட்ட பாதி வசூலாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் 19.75 கோடி, கர்நாடகாவில் ரூ.7.25 கோடி, கேரளாவில் ரூ.4.25 கோடி, இந்தி பேசும் மாநிலங்களில் ரூ.5 கோடி என இப்படம் வசூலித்துள்ளது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

லஞ்சம், ஊழலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இருந்து 20 நிமிடக் காட்சிகள் சில நாள்களுக்கு முன் குறைக்கப்பட்டன.

இதற்கிடையே ஆகஸ்ட் மாதமே இந்தியன் 2 திரைப்படத்தை இணையத் தளங்களில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இதற்கிடையே கமல், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்து வருகிறார். தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் தக்லைப் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் எனத் தெரிகின்றது.

அதன் பிறகு கமல் அமெரிக்காவிற்குச் செல்கிறாராம். தற்போது ஏ.ஐ தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் புதிய பாணியாக இருப்பதால் அந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள கமல் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்று சொல்லப்படுகிறது. அங்கு 90 நாள்கள் தங்கி இருந்து ஏ.ஐ தொழில்நுட்பத்தை கமல் கற்றுக்கொள்வார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திகமல்ஹாசன்