நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டகிராமில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பெயர் சூட்டு விழா புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தியைக் குறிப்பிட்டு, “ஆப்ரேஷன் தியேட்டரில் உன்னுடன் இருந்தேன். நம் குழந்தையைப் பெற்றெடுக்க நீ கடந்து வந்த வலிகளைக் கண்டேன். இந்த அழகான உலகத்தை எனக்காக உருவாக்கிக் கொடுக்க, நீ தாங்கிய வலிகளுக்காக என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
2010ல் நடிகர் சிவகார்த்திகேயனும் ஆர்த்தியும் திருமணம் செய்துகொண்டனர். தம்பதிகளுக்கு ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உண்டு. கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி அவர்களுக்கு 3வதாக ஆண்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பவன் என்று அவர் பெயர் சூட்டியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இவ்வாண்டு தொடக்கத்தில் ‘அயலான்’ வெளியானது. அடுத்து ‘அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் ‘எஸ்கே23’ என்ற தலைப்பிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.