சதுர் திரைப்படம் 1,000 வரைகலை காட்சிகளுடன் உருவாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில் இந்தப் படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார். அமர் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஜீவா ரவி, இஷிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார்.
“நான் கோவையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வி.எப். எக்ஸ். கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்கும் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தேன். ஏராளமான விளம்பரப் படங்களுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளேன். அந்த அனுபவத்தால் ஒரு கதையை தயார் செய்தேன். அந்தக் கதை தான் ‘சதுர்’ படமாக உருவாகியுள்ளது,” என்று இயக்குநர் அகஸ்டின் பிரபு கூறியுள்ளார்.
“நான்கு காலகட்டங்களில் கதை இருப்பதால் சதுர் எனப் பெயர் வைத்துள்ளோம். 500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னன் காலத்தில் ஒரு கதை.
“அடுத்து இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லர் சம்பந்தப்பட்ட கதை, அதேபோல் 1967ஆம் ஆண்டு தனுஷ்கோடி நகரம் கடலுக்குள் எப்படி சென்றது என்பது போன்ற கதை, அதோடு இந்தக் காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதை என நான்கு கால கதைகள் இதில் உள்ளன.
“கதாநாயகன் அமர் தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார். பெரிய படங்களுக்கு நிகராக 1,250 கிராபிக்ஸ் காட்சிகள் இதில் இடம்பெறுகின்றன. இந்திய அளவில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் உள்ள 20 படங்களில் இப்படமும் ஒன்று. தமிழகத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் உள்ள 10 படங்களில் இப்படமும் இடம்பெறும். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெறுகின்றன. படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.

