பக்கத்து வீட்டு பெண்ணைப்போல் தோற்றமளிப்பதுதான் நடிகை அபர்ணா பாலமுரளியின் பலம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
சூர்யாவுடன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்த பிறகு தனக்குப் பிடித்தமான, நல்ல கதாபாத்திரங்களை மட்டும் ஏற்று நடித்து வருகிறார் அபர்ணா.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராயன்’ படத்தில் இவர்தான் கதாநாயகி. இந்த வாய்ப்பு தேடி வரும் என கனவிலும் நினைக்கவில்லையாம்.
“நான் நடித்த ‘நித்தம் ஒரு வானம்’ படத்துக்கான படப்பிடிப்பில்தான் தனுஷை சந்தித்தேன். முன்னதாக தனுஷ் தரப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த ஒரு அழைப்பின் மூலம் தனுஷுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு நிறைவேறியது.
“எனது கதாபாத்திரம் குறித்தும் படத்தின் கதை குறித்தும் மேலோட்டமாக விவரம் தெரிவித்தார் தனுஷ். அதிலேயே அந்தக் கதை என்னைக் கவர்ந்துவிட்டது.
“எப்படிப்பட்ட கதையாக இருந்திருந்தாலும் இந்த வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டிருப்பேன். தனுஷ் நடிக்கும் படம் என்ற ஒரு காரணம் மட்டுமே அப்படத்தில் நடிக்க போதுமானது,” என்கிறார் அபர்ணா பாலமுரளி.
சிறு வயதில் திரையில் தோன்றிய பலரது நடிப்பைப் பார்த்து ரசித்த நிலை மாறி, இன்று அந்த நடிகர், நடிகைகளுடன் இணைந்து நடிப்பது சற்றும் எதிர்பாராதது என்றும் வியப்புடன் சொல்கிறார். நடிகர்கள் ஃபகத் ஃபாசில், தனுஷ் ஆகிய இருவரின் தீவிர ரசிகையாம் இவர்.
“ஃபகத் ஃபாசிலுடன் மலையாளத்தில் இரு படங்களில் நடித்துள்ளேன். முதல் படத்தில் நடித்தபோது மனதில் நிறைய கேள்விகளும் தயக்கமும் இருந்தன. இப்போது இருவரும் கூட்டாளிகளைப்போல் மாறி விட்டோம்.
தொடர்புடைய செய்திகள்
“அடுத்து தனுஷுடன் நடித்துள்ளேன். என் திரைப்பயணத்தில் இது மறக்க இயலாத மைல்கல்லாக இருக்கும்,” என்று சொல்கிறார் அபர்ணா.
‘ராயன்’ படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மேகலா. இதுவரை இப்படிப்பட்ட அருமையான கதாபாத்திரத்தில் தாம் நடித்ததில்லை என்றும் தனுஷுடன் இப்படிப்பட்ட பாத்திரத்தில் இணைந்து நடிப்பது ஆகப்பெரிய வாய்ப்பு என்றும் கூறுகிறார்.
“மேகலாவைப் பொறுத்தவரை அப்பாவியான பெண். வடசென்னை பகுதியைச் சேர்ந்தவர். தனக்குப் பிடித்தமானவர்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டாள். ஒருவேளை பிடிக்கவில்லை என்றால் அவர்களை ஒரு வழியாக்கிவிடுவாள். இந்த கதாபாத்திரம் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது,” என்கிறார் அபர்ணா.
மேலும், மேகலா கதாபாத்திரம் தன்னம்பிக்கை நிறைந்ததாக சித்திரிக்கப்பட்டுள்ளதை தாம் வெகுவாக ரசித்ததாகவும் சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரியாது. எனவே தனுஷ் என்னிடம் கொடுத்த கதை, திரைக்கதை ஆகியவை ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தன.
“மேலும் சில வார்த்தைகளை, வசனங்களை எவ்வாறு வடசென்னை வட்டார நடையில் பேச வேண்டும் என்பதற்கான குறிப்பு களும் இருந்தன. அதனால் சிரமமின்றி வசனங்களைப் பேசி நடிக்க முடிந்தது.
“தனுஷைப் பொறுத்தவரை ஒரு கதாபாத்திரத்துக்காக முன்கூட்டியே தயாராக வேண்டும் என்பது அவசியமில்லை என்று நினைக்கிறார். படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த பிறகு இயல்பாக பேசி நடித்தால் அதுவே போதும் என்பார்,” என்று அபர்ணா பால முரளி மேலும் தெரிவித்துள்ளார்.

