அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பதியர் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தொடர்ந்து வெளியாகும் தகவல்களை இருவரும் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், இருவருமே திரையுலகப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தில் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். படத்துக்கு ‘கிங்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
ஷாருக்கானின் மகள் சுஹானா, இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார். அநேகமாக அனிருத் இப்படத்துக்கு இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது மகனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், “வாழ்த்துகள் அபிஷேக்… இதுவே சரியான நேரம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கணவருக்குப் போட்டியாக ஐஸ்வர்யாவும் பல படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஜோதிகா, நயன்தாரா ஆகியோரைப் பின்பற்றி தனது வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அது மட்டுமல்ல, ரஜினி தற்போது நடித்து வரும் படங்களை முடித்த பின்னர் அவருடன் இணைந்து நடிக்க விரும்புவதாக ஐஸ்வர்யா தெரிவித்ததார் என்றும் ஆனால் ரஜினி இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கோடம்பாக்க வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

