இன்றைய தலைமுறையினர் குறித்த படம் ‘பன் பட்டர் ஜாம்’

2 mins read
ce610861-aeb4-4324-b97e-96f1d50ab300
ராஜு. - படம்: ஊடகம்

‘பிக்பாஸ்’ புகழ் ராஜு தற்போது ‘பன் பட்டர் ஜாம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

ராகவ் மிர்தாத் இயக்கும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் அதிகரித்து வருகிறது.

சினிமா என்பது அழகான கலை என்றும் கலைகள்தான் மனித உணர்வுகளைப் பக்குவப்படுத்தும் என்றும் தத்துவார்த்தமாகப் பேசுகிறார் இயக்குநர் ராகவ்.

மனிதனை அன்பால் தொடுவதே நல்ல இலக்கியம், திரைப்படம் என்று தாம் கருதுவதாக விகடன் ஊடகப்பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மனிதனின் வறண்ட பகுதியை ஈரமாக்க வேண்டும். வாழ்க்கை நம்மை எந்த எல்லைக்கும் கொண்டு போகலாம். ஆனால் அன்புக்காக அலைவதுதான் நீதி.

“ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏராளமான பிரச்சினைகள் இருக்கக்கூடும். நிறைய பேரை நாம் நோகடித்திருப்போம். அவ்வாறு இல்லாமல் நாம் எந்த அளவுக்கு இனிமையாக அனைத்தையும் கடந்து போகிறோம் என்பது முக்கியம்.

“இந்த கணத்தில் வாழ்ந்தால் நமக்கு சிக்கலே இல்லை. அதை உணர்ந்து செயல்பட்டால் இன்றைய தலைமுறையினருக்கும் இது உணர்வுபூர்வமான பலனாக இருக்கும்,” என்கிறார் ராகவ் மிர்தாத்.

‘பன் பட்டர் ஜாம்’ என்பது ரசிகர்களை உடனடியாக ஈர்க்கும் என்று கருதி இத்தலைப்பை வைத்தனராம்.

இன்றைய பரபரப்பான சூழலில் அண்மையில் பெரும்பாலானோர் நாள் முழுவதும் 15 மணி நேரம் கைப்பேசிகளைப் பார்த்தே பொழுதைக் கழித்துவிடுகிறோம்.

“இந்தச்சூழ்நிலையில் வளர்ந்து ஆளாகும் குழந்தைகள், பெரியவர்களான பிறகு காதலை எப்படிக் கையாள்வது, எவ்வாறு நட்பு பேணுவது என்பதை கற்றுத்தர வேண்டியுள்ளது.

“மேலும் அவர்களுக்குள் ஏராளமான முரண்கள் உள்ளன. எனவே அவர்களிடம் நட்போடு இருந்தால்தான் தங்களுடைய மனக்குழப்பங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்வார்கள். இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப்படத்தை உருவாக்கி உள்ளேன்.

“நேற்று, நாளை குறித்து கவலைப்படாமல் இந்த நிமிடம் மட்டுமே உண்மை எனக் கொண்டாடுகிறது இன்றைய தலைமுறை. அவர்களை அதிர்ச்சியாக பார்க்கும் பெற்றோருடனான உறவை அலசும் வகையில் கதை, திரைக்கதையை அமைத்துள்ளோம்,” என்கிறார் ராகவ்.

‘பிக் பாஸ்’ புகழ் ராஜுவிடம் இன்றைய தலைமுறையினர் இடையே உள்ள வேகம், ஒரு சின்ன அலட்சியம் காணப்படும். அதனால் தனக்கான கதாபாத்திரத்துடன் தன்னைப் பொருத்திக்கொள்வது அவருக்கு சிரமமாக இல்லை.

இன்றைய தலைமுறையை தங்கள் வழிக்கு கொண்டுவர பெற்றோரும் மற்றோரும் மேற்கொள்ளும் முயற்சிகள், இதனால் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள், இறுதியில் என்ன ஆகிறது என அனைத்தையும் நகைச்சுவை ததும்ப விவரித்துள்ளாராம் இயக்குநர்.

“ராஜு ஒரு இளம் நாயகனாக முன்னேறுவார் என நம்புகிறேன். அவரிடம் அதற்கான திறமையும் அர்ப்பணிப்பும் உள்ளது. இப்படத்தில் ஆதித்யா பிரசாத், பவ்யா திரிகா என இரண்டு நாயகிகள் உள்ளனர்.

“நாயகன், நாயகிக்கு இணையான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் பொன்வண்ணன் நடித்துள்ளார். தேவதர்ஷினி, சார்லி ஆகியோரும் உள்ளனர்.

“நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இளையர்களுக்கு ஏற்ற இசையைத் தரும் இவர், தமிழ் சினிமாவில் பல உயரங்களைத் தொடுவார். எட்ட முடியாத இடத்துக்குச் செல்வார்,” என்று பாராட்டு தெரிவிக்கும் ராகவ், இப்படத்துக்காக நண்பர் என்ற வகையில் மிகவும் மெனக்கெட்டு நான்கு பாடல்களைத் தந்துள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர் ராகவ்.

குறிப்புச் சொற்கள்