எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
ஆன்மிகத்தின் உதவியால் வலியைக் கடந்து வலிமையாகிவிட்டதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற வேண்டும் என நினைப்போம். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் எனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்து விஷயங்களுமே நடந்திருக்கக் கூடாது என்றே விரும்புகிறேன்.
“எனினும் எதுவும் நம் கையில் இல்லை. வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும்,” என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
அனைவரது வாழ்க்கையிலும் பிரச்சினைகளும் வலிகளும் இருப்பதாகக் கூறியுள்ள அவர், அனைத்தையும் எப்படி கடந்து வருகிறோம் என்பதுதான் முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடிப்படையில் தற்போது வலிமையாக இருப்பதை உணர்வதாகவும் அதற்கு ஆன்மிகம் பல வகையிலும் உதவி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.
இதற்கிடையே, தமது அடுத்த படத்தில் ஏற்றுக்கொண்டுள்ள கதாபாத்திரத்துக்காக குறுகிய கால பயிற்சியைத் தொடங்கிவிட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க இருப்பதாகவும் சமந்தா மேலும் கூறியுள்ளார்.

