எஸ்.ஜே.சூர்யாவை தமிழ்த் திரையுலகத்தின் தலைநகரான கோடம்பாக்கத்தில் ‘நடிப்பு அசுரன்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
இன்றுள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் திரையில் அவருடன் மோத விரும்புகிறார்கள்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வில்லனாக அசத்தி வரும் இவர், ஃபகத் ஃபாசில் நடிக்கும் படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார்.
“எனது நடிப்பு அசுரத்தனமாக உள்ளது என விமர்சகர்களும் ரசிகர்களும் பாராட்டும்போது பெருமையாக உணர்கிறேன். இந்தப் பாராட்டுகள் விருதுகளைவிட அதிக மதிப்புள்ளவை.
“இதுவரை நான் வெளிப்படுத்தி உள்ள நடிப்பு ஒரு படத்துக்கான முன்னோட்டக்காட்சித் தொகுப்பு போன்றதுதான். முழுப் படத்தையும் இனிமேல்தான் ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள்,” என்று சொல்லிச் சிரிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
தமிழில் இவர் அடுத்தடுத்து நடிக்க உள்ள புதிய படங்களின் வரிசை உண்மையாகவே பிரமிப்பூட்டுகிறது.
தனுஷின் ‘ராயன்’, சங்கரும் ராம் சரணும் இணைந்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படம், நானி, விக்ரம், கார்த்தி, ராகவா லாரன்ஸ், ஃபகத் ஃபாசில் எனப் பெரும்பாலான முன்னணி கதாநாயகர் களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.
இவற்றுள் ‘ராயன்’ படத்தில் தனுஷுடன் போட்டி போட்டு நடித்ததாக இவரைப் படக்குழுவினர் பாராட்டுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களுக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ரசிகர்களைத் தன் நடிப்பால் கட்டிப்போட்டுள்ளார். அவர் மிக விரைவில் அடுத்தக்கட்ட உயரத்துக்குச் செல்வார் என்று விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.
இத்தனை படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கிய நிலையில், தெலுங்கில் நானி யுடன் ஒரு படத்தை முடித்துள்ளார்.
தன்னுடன் நடிக்குமாறு நானி கோரியபோது, ஏற்கெனவே பல படங்கள் தனக்காக காத்திருப்பதால் புதிய படங்களை ஏற்க வாய்ப்பே இல்லை என எஸ்.ஜே.சூர்யா மறுத்துவிட்டாராம்.
பிறகு கதையைக் கேட்ட பிறகு அது பிடித்துப்போக, ஓய்வுகூட எடுக்காமல் மிகவும் சிரமப்பட்டு நடித்துக்கொடுத்தாராம்.
பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ள இப்படம் தமிழில் ‘சூர்யாவின் சாட்டர் டே’ என்ற பெயரில் வெளியாகிறது.
விக்ரமுடன் நடித்து வரும் ‘வீர தீர சூரன்’, ராகவா லாரன்சுடன் ‘பென்ஸ்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சர்தார் 2’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவைக் காண முடியும்.
மலையாளத்தில் ‘ஜெய ஜெய ஜெய ஹே’ என்ற படத்தை இயக்கிய விபின்தாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா எதிர்பார்த்ததைவிட அருமையான வேடம் வாய்த்துள்ளதாம். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.
இவை தவிர கமலின் ‘இந்தியன் 3’ படத்திலும் முக்கியமான வில்லனாக திரையில் தோன்ற உள்ளார். இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் ஊட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் எஸ்.ஜே.சூர்யா தரப்பு தெரிவித்துள்ளது.