மொழி உள்ளிட்ட தடைகளைக் கடந்து, திறமைசாலிகளுக்கு திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவதாகச் சொல்கிறார் நடிகை சம்யுக்தா.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தாம் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைப்பதாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த திரையுலகில் பல்வேறு அம்சங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் சில மாற்றங்களைப் பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“நான் கேரளாவைச் சேர்ந்தவள். தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறேன். முன்பெல்லாம் எந்த மொழியில் நடிக்கிறோம், கதாநாயகர்கள், சக கலைஞர்கள் குறித்து என்ன கருதுகிறோம் என்பதையெல்லாம் மிகுந்த கவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்.
ஒருவேளை நமது கருத்து திரிக்கப்பட்டு இருந்தால் கடும் எதிர்ப்பை எதிர்கொள்வதுதான் ஒரே வழி. இன்றைய கணினி யுகத்தில் எல்லாம் மாறிவிட்டது. நம்மைப்பற்றி வெளியிடப்படும் பொய்யான தகவல்கள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியும்.
“மேலும் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு ஒரு தன்னிலை விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பையும் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்,” என்கிறார் சம்யுக்தா.
இந்தி திரையுலகிலும் அறிமுகமாகிவிட்ட மகிழ்ச்சியை இவரது முகத்தில் பார்க்க முடிகிறது. தற்போது மொழிகளைக் கடந்து ரசிகர்கள் திரைப்படங்களை ரசிக்கத் தொடங்கி இருப்பது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி என்கிறார்.
“தெலுங்கு நடிகர்கள் இந்தியிலும், இந்தி நடிகர்கள் மற்ற மொழிகளிலும் நடிக்கின்றனர். உண்மையை வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் பாலிவுட் திரையுலகம் தொழில்நுட்ப ரீதியில் ஒருபடி மேலே சென்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.’
தொடர்புடைய செய்திகள்
“இந்திப் படங்களில் நடிக்க விரும்புகிறவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம். அங்கு இயல்பாகவே போட்டிகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு மத்தியில் நமது திறமையை நிரூபித்தாக வேண்டும்.
“நமது முழுக்கவனத்தையும் நடிக்கும் படத்திலும் கதாபாத்திரத்திலும் செலுத்தினால் யாராலும் நம்மை புறக்கணித்துவிட இயலாது. ஒருசிலருக்கு இடையே நடக்கும் வீண் மோதல்கள் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை,” என்கிறார் சம்யுக்தா.
தன்னைப் பொறுத்தவரை இந்தி, தென்னிந்திய திரை உலகத்துக்கு இடையே உள்ள இடைவெளி வேகமாகக் குறைந்து வருவதாகச் சொல்பவர், எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்கத்தயாராக உள்ளாராம்.
தற்போது ‘மஹாராக்னி’ என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார் சம்யுக்தா. இதில் கதைப்படி நடிகை கஜோலின் தங்கையாக நடிக்கிறாராம். அடிதடி, இசை, பாடல்கள் என இப்படத்தில் நிறைய சுவாரசியமான அம்சங்கள் உள்ளதாகக் கூறுகிறார்.
‘மஹாராக்னி’ படத்தில் எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
“ரசிகர்கள் இப்போது அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறார்கள். மொழி, மாநிலம் போன்ற தடைகளை எல்லாம் கடந்து நல்ல படைப்புகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இதை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி நாம் வாழும் சமூகத்துக்கு தேவையானவற்றைச் செய்ய வேண்டும்,” என்கிறார் சம்யுக்தா.
இந்தப் படத்தில் இன்னொரு சுவாரசியமான அம்சமும் உள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் பிரபு தேவாவும், நடிகை கஜோலும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
‘மஹாராக்னி’ படத்தில் நஸ்ருதின் ஷா, சாயா கதம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

