இசையமைப்பாளர் அனிருத் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அவர்களுடைய முதல் விருப்பம் அனிருத் தான் என்றும் அவரால் இசையமைக்க இயலாவிட்டால் மட்டுமே மற்ற இசையமைப்பாளர்களைப் பரிசீலிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெறும் பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம்.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பிறகே இப்படத்துக்கான பின்னணி இசையமைக்கும் பணி தொடங்கப்படுமாம்.
அண்மையில் அனிருத் இசையில் வெளிவந்த ‘இந்தியன் 2’ படத்தின் பாடல்களுக்கான வரவேற்பு எதிர்பார்த்தபடி அமையவில்லை என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எனினும், விமர்சனங்களை ஓரங்கட்டிவிட்டு வழக்கமான இசைப்பணிகளில் ஈடுபட்டுள்ளார் அனிருத்.
இவரது கைவசம் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் உள்ளன. எனவே அப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து இசையமைத்து வருகிறாராம்.
தற்போது ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துக்கான இசைப்பணியில் ஈடுபட்டுள்ள அனிருத், மிக விரைவில் இப்படத்துக்கான முன்னோட்டக் காட்சித் தொகுப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
‘வேட்டையன்’ படத்தையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்துக்கும் இவர்தான் இசையமைக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌரி கிஷன் ஆகியோர் நடிக்கும் படங்களுக்கும் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் அனிருத்.
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘எஸ்.கே.23’ படத்துக்கு கூடுதலாக மெனக்கெடுகிறாராம்.
‘கத்தி’, ‘தர்பார்’ ஆகிய படங்களை அடுத்து முருகதாஸ், அனிருத் இருவரும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘விஜய் 69’ படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என கோடம்பாக்கத்தில் சொல்லப்படுகிறது.