தனுஷின் 50வது படமாக உருவாகியிருக்கிறது ‘ராயன்’. தனுஷ் இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமும் நடித்துள்ளார்.
தனது திரை அனுபவங்களை தமிழக வார இதழில் பகிர்ந்துள்ள காளிதாஸ் ஜெயராம், படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு பம்பரமாகச் சுழன்றதாகக் கூறியுள்ளார்.
“முக ஒப்பனையுடன் குறித்த நேரத்துக்கு படப்பிடிப்புத் தளத்துக்கு வரும் தனுஷ், ஒருபுறம் ஷாட்டையும் கவனித்துக்கொண்டு, மறுபுறம் தானும் தயாராகி கேமரா முன் நிற்பார். ‘மானிட்டர்’ பார்ப்பது, மற்றவர்களின் ஆடை அலங்காரத் திருத்தங்களை அவரே நேரில் முன் வந்து சொல்வார். இதெல்லாம் பெரிய விஷயம். இன்னும் இதுபோல் அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது,” என தனுஷைப் பாராட்டுகிறார் நடிகர் காளிதாஸ்.
“ராயன்’ கதை பற்றி யாரிடமும் பகிரக்கூடாது எனக் கூறியுள்ளனர். இருந்தாலும் ஒரு வரி மட்டும் சொல்கிறேன். தனுஷ் சார், சந்தீப், நான் என எங்கள் மூவரின் அன்புத் தங்கையாக துஷாரா. இப்படிப்பட்ட குடும்பத்துக்கு ஒரு பெரும் பிரச்சினை வருகிறது.
“அது என்ன பிரச்சினை, முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை,” எனக் கூறிவிட்டு புன்முறுவல் பூத்தார் காளிதாஸ்.
எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் என படம் முழுக்க பெரும் ஜாம்பவான்கள் நடித்துள்ளனர். அவர்களுள் ஒருவராக நானும் நிற்கும்போது ஏதாவது வித்தியாசமாக செய்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம் ஏற்பட்டது. படத்தில் நீயும் நடித்திருப்பது வெளியே தெரியவேண்டுமெனில் “டேய் காளிதாஸா, ஏதாவது வித்தியாசமாக பண்ணுடா” என ஒரு குரல் என்னுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
உண்மையிலேயே இந்தப் படம் எனக்குக் கிடைத்தது பெரிய வரம் என்றுதான் சொல்லுவேன் என்று கூறிய காளிதாஸ், “கமல், விஜய் சேதுபதி, தனுஷ், எஸ்.ஜே.சூர்யா சார் என அனுபவமுள்ள பலருடனும் பயணம் செய்துவருகிறேன். இதைத்தான் என்னை நானே மெருகேற்றிக் கொள்வதற்கான பாதையாகப் பார்க்கிறேன்.
“அப்பா ஜெயராம் ‘லெஜெண்ட்’. அவர் வழியில்தான் நானும் நடிக்கிறேன். போட்டியாகப் பார்க்கவில்லை. ஆனால், இப்போதும் அவரால் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ மாதிரியான பெரிய வெற்றிப் படங்களைக் கொடுக்கமுடிவது எனக்கு பெரும் ஆச்சரியமாகத்தான் உள்ளது,” என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
பெரும்பாலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படங்கள் என்றால் ஜாலியாக நடிப்பார். உண்மையாகவே அதில் நிறைய பலன் இருக்கு. கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
‘ராயன்’ படத்துக்கு விசில் தெறிக்கும். நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும். 100% தனுஷ் சார் ரசிகர்களுக்கான படமாக இது இருக்கும். பொறி பறக்கும் காட்சிகள் இப்படத்தில் நிரம்ப உள்ளது.
“எனக்கு நடிப்புதான் தெரபி. அதனால் நல்ல பாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் நடிப்பேன். நடித்துக்கொண்டு இருக்கும்போதுதான் நான் உயிர்ப்புடன் இருக்கிறேன். அதிலும் அனுபவம் வாய்ந்த கலைஞர்களுடன் வேலை செய்யும்போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. புதிதாக கற்றுக்கொள்ள முடிகிறது.
“விஜய், அஜித் சார் போல் ஒவ்வொரு படத்திலும் நச்சென்று நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், அந்த இடத்தை அடைவதற்கு நிறைய தூரம் பயணம் செய்தாக வேண்டும். அதுதான் ஒரு நடிகனாக அடைகிற மிகப்பெரிய வெற்றி என்றும் சொல்லலாம்.
இப்போது ‘ராயன்’ வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன். தொடர்ந்து ‘நிலா வரும் வேளை’ படத்தில் நாயகனாக நடித்துள்ளேன். பாலாஜி மோகன் சார் இயக்கத்தில் காதல், நகைச்சுவையுடன் கூடிய படம் முடிந்துள்ளது. விரைவில் இப்படத்தின் தலைப்பு வெளிவரும்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி வரும் நிலையில், ‘ராயன்’ படம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் ஓநாய் போல் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு வில்லன் பாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறியுள்ள எஸ்.ஜே.சூர்யா, தனது பாத்திரத்துக்கு ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

