‘ரகு தாத்தா’ படம் ஒரு முழுமையான நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ளதால், படம் பார்க்கத் திரையரங்கிற்கு வருபவர்கள் வயிறு குலுங்கச் சிரித்துவிட்டு ஜாலியாகச் செல்லலாம் என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
“அரசியல் தாக்கம், எதிர்மறையான கருத்துகள், முன்னுக்குப் பின் முரண் என படத்தில் எந்த ஒரு இடத்திலும் நெருடல்கள் இருக்காது,” என்றும் அவர் கூறினார்.
ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ படம் ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது.
சென்னையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ், “இயக்குநர் சுமனிடம் கதையைக் கேட்டதும், இதற்கு முன்னால் இதுபோன்ற ஒரு கதையைக் கேட்டதில்லையே. இந்தப் பாத்திரம் நமக்கு ஒத்து வருமா என்று யோசித்தேன். இந்தக் கதைக்களத்தால் ரசிகர்களைத் திரையரங்கத்திற்குள் இழுத்துவர முடியுமா? என்ற தயக்கமும் இருந்தது. அதனை இயக்குநர் சுமனும் தயாரிப்பாளர் விஜய்யும் உடைத்தெறிந்தனர்.
“ரகு தாத்தா’ படத்தில் இந்தி திணிப்பு பற்றி பேசப்படவில்லை. கதையைத் தொடர்புபடுத்தும் வகையில் இந்தி திணிப்பு ஒரு உதாரணமாகக் கையாளப்பட்டுள்ளது. பெண்கள் மீதான திணிப்பு பற்றித்தான் பேசப்பட்டுள்ளது.
“அது எந்தமாதிரியான திணிப்பு என்பதை இப்போதே கூறிவிட்டால் படத்தைக் காணும்போது அதிலுள்ள சுவாரசியம் குன்றிவிடும். அதனால், நேரில் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் சிறிதளவு கருத்து சொல்ல முயற்சி செய்துள்ளோம்.. ஆனால், அது அறிவுரையாக இருக்காது. இது படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்குப் புரியும். கண்டிப்பாக இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்,” என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
‘ரகு தாத்தா’ படத்தில் எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர். சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

