தன்னைப் பற்றி பரவும் காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்.
‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்றவரான நடிகை சுஷ்மிதா சென், பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். 1997ல் நாகர்ஜூனாவின் ஜோடியாக ‘ரட்சகன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
46 வயதான போதும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.
எனினும், ரெனீ, அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா, குழந்தைகள் வளர்ப்பில் முழுநேரத்தையும் செலவிட்டு வருவதால் முன்புபோல் தன்னால் அதிகமான படங்களில் தலைகாட்ட முடிவதில்லை என்கிறார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு ‘டாலி’ என்ற படத்தில் நடித்திருந்தார். கௌரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இப்படம் கடந்த 2023ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரோஹ்மன் என்பவருடன் ஐந்தாண்டு காலம் நெருங்கிப் பழகிய சுஷ்மிதா, கடந்த 2021ல் அவரது உறவை முறித்துக்கொண்டார்.
அதன்பின்னர், நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் 56 வயதான தொழிலதிபர் லலித் மோடியுடன் இணைத்து சுஷ்மிதா கிசுகிசுக்கப்பட்டார்.
இந்நிலையில், தன்னுடன் இரு குழந்தைகளும் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா.
தொடர்புடைய செய்திகள்
அதில், “மிகவும் திருப்தியான பெண் நான். இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை,” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ள சுஷ்மிதா, “எனது ஐந்து ஆண்டுகால காதல் வாழ்வை அன்புடன் முடித்துக்கொண்டேன். இப்போது தனிமையில் இருந்தாலும் நிம்மதியாக வாழ்கிறேன்.
“எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. நான் தனிமையாக இருப்பதுபோல் உணர்ந்தால் நண்பர்களைச் சந்திப்பேன். அவர்களுடன் ஜாலியாகச் சுற்றுலா செல்வேன். வாழ்நாள் முழுவதும் என் குழந்தைகளுடன் தனியொருத்தியாக வாழ்வை ரசித்து மகிழ்வேன்,” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.