ரகுவரனின் வாழ்த்து என்னை வாழ வைத்துள்ளது: நடிகர் சூர்யா

ரகுவரனின் வாழ்த்து என்னை வாழ வைத்துள்ளது: நடிகர் சூர்யா

3 mins read
cbdcc583-4c7e-48e0-9878-dc624f3ca41c
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படக்காட்சி. - படம்: ஊடகம்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா, செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

“மூத்த நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு திரையுலகில் அறிமுகமானாலும், ஆரம்பக் காலத்தில் நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் என்னை அழவைத்துவிட்டன.

“அதேவேளையில் நடிகர் ரகுவரனின் வாழ்த்துகளும் அறிவுரைகளும்தான் என்னை முன்னணி நடிகர்களுள் ஒருவராக உச்சம் தொட வைத்துள்ளது,” என்று பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார் சூர்யா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம், ஏறக்குறைய பத்து மொழிகளில் ஆயுத பூஜை தினத்தன்று (அக்டோபர் 10) வெளிவரவுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் ‘ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே’ என்ற முதல் பாடலை சூர்யாவின் பிறந்தநாளில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்‌ஷித், ஆதி நெருப்பே பாடலுக்கு நடனம் அமைத்து பட்டையைக் கிளப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று முடிந்துள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளில் ‘சூர்யா 44’ படத்தின் சிறு காணொளி ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ‘தி ஒன்’ என்ற வார்த்தைகள் இடம்பெறுவதால், ‘சூர்யா 44’ படத்தின் பெயர் ‘தி ஒன்’ என இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

‘சூர்யா 44’ படக் காணொளியில் சூர்யா புகை பிடித்திருப்பதைப் பார்த்து அதனைக் கண்டித்து டுவிட் செய்துள்ளார் அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவி ராஜேஸ்வரி பிரியா.

“சிகரெட் பிடித்தபடி நடித்து இளைய சமுதாயத்தைப் பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

“உங்கள் தம்பி நடிகர் கார்த்தி, புகைபிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை பிடிப்போடு உள்ளார். உங்கள் அறக்கட்டளை மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் எனத் தெரியாதா?” என எக்ஸ் தளப் பதிவில் கேட்டுள்ளார்.

அதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், “அக்கா, சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள். சூர்யாவை ஏன் குறை சொல்கிறீர்கள்? சிகரெட் தயாரிப்பாளர்களை அல்லவா நீங்கள் கேள்வி கேட்கவேண்டும்? ” என சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

சூர்யாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வரும் நிலையில், சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி என்றும் அவரது மனைவி ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ.330 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் இருவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் ரூ.530 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கோலிவுட்டின் பணக்கார ஜோடியாகவும் இவர்கள் திகழ்ந்து வருகின்றனர்.

வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு நடிக்கத் தெரியவில்லை, நடனம் வரவில்லை, வசனம் பேசத் தெரியவில்லை எனப் பலரும் விமர்சித்தனர்.

இருப்பினும் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது முதல் படத்தை திரையில் காணச் சென்றுள்ளார் சூர்யா. அவரிடம் ஓடி வந்த ரசிகர் ஒருவர், “தலைவா சூப்பரா சொதப்பியிருக்க, இனிமேல் நடிக்கவே நடிக்காதே. இதோடு நிறுத்திக்கோ,” என்று சொல்லிவிட்டாராம். இதைக்கேட்டு கண் கலங்கினேன்.

அதன்பின்னர், நடிகர் ரகுவரன் ஒருநாள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த என்னை அழைத்து, “இப்படியே இருந்துவிடாதே, வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும். ஒரு முன்னணி நடிகர் என நீ பெயரெடுக்கவேண்டும்,” என அறிவுறுத்தினார்.

இந்த அறிவுரைதான் என் திரைப்பயணத்தையே மாற்றியமைத்தது என்று சூர்யா தமிழக ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்