தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்யாணத்துக்கு பெண் தேடுகிறேன்; வரதட்சணை வேண்டாம்: அப்புக்குட்டி

2 mins read
01c31a06-798b-46b8-b070-d0ba9664b8a7
 ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படக் காட்சியில் அப்புக்குட்டி. - படம்: ஊடகம்

கடந்த பத்து ஆண்டுகளாகப் பெண் தேடி வருகிறேன். இன்னும் சரியான துணை அமையவில்லை என்று வருத்தப்படுகிறார் நடிகர் அப்புக்குட்டி.

“என் பெற்றோர் உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் பெண் தேடி எனக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பார்கள். ஆனால், அந்தக் கொடுப்பினை எனக்குக் கிட்டாமல் போய்விட்டது.

“பெண்ணிடம் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. முக்கியமாக, எனக்கு வரதட்சணை கூட வேண்டாம். நல்ல பெண்ணாக இருந்தால் போதும்,” என்று சொல்பவர், “நான் நிறைய பேரை விரும்பி உள்ளேன். ஆனால், என்னை யாரும் விரும்பவில்லை.

“நான் விரும்புவதாகக் கூறினால்கூட, சிரித்துக்கொண்டே சென்றுவிடுகிறார்கள். அதனால், காதல் திருமணம் எல்லாம் எனக்குப் பொருத்தப்பட்டு வராது,” என்கிறார் அழுத்தமாக.

“எல்லோரும் நான் நடிகர் என்பதால் பெண் கொடுக்க யோசிக்கிறார்கள். அதை நினைத்தால்தான் மனது வலிக்கிறது.

“பல படங்களில் நடித்துள்ளேன். வாழ்க்கையை நடத்துவதற்கான பொருளாதார வசதியும் உள்ளது. ஆனாலும், பெண் கிடைக்காமல் திண்டாடுகிறேன்.

“சிலநேரங்களில் பெண் கிடைக்காமல் மன உளைச்சல்கூட ஏற்பட்டுள்ளது. எனக்கு மட்டுமல்ல, பொதுவாகவே ஆண்-பெண் இருவருக்குமே வாழ்க்கைத்துணை கிடைக்காமல் போனால் நிச்சயம் மன உளைச்சல் உண்டாகும்.

“கிடைக்கும்போது கிடைக்கட்டும் என நம்பிக்கையோட காத்திருக்கிறேன். நானே நன்கு சமைப்பேன். வற்றல் குழம்பெல்லாம் அருமையாக வைப்பேன்,” என்று வெள்ளேந்தியாகச் சொல்கிறார் அப்புக்குட்டி.

‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் அப்புக்குட்டி. இவர், நாயகனாக நடித்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் ‘டீசர்’ அண்மையில் வெளியானது.

தமிழக ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “ஜீவ காருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என அடுத்தடுத்த படங்களிலும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று படங்களும் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசும்.

“நடிப்பு என்றால் எனக்கு உயிர். நாயகனாக மட்டுமன்றி, நகைச்சுவை, எதிர்மறை, துணை நடிகர் என எந்தப் பாத்திரம் கிடைத்தாலும் ஆர்வமாக செய்கிறேன். என்னை ஒரு நடிகனாக அடையாளம் காட்டியது ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம்தான் என்கிறார் அப்புக்குட்டி.

“அந்தப் படத்தில் நடித்த விஷ்ணு விஷால், சூரி, நான், விஜய் சேதுபதி எல்லோருமே நாயகனாகி விட்டோம். இதற்கெல்லாம், முழுக்காரணம் சுசீந்திரன் சார்தான். வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கேன்.

“வறுமை காரணமாக சென்னைக்கு வந்து ஓர் உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். உணவகத்தில் சாப்பிட வந்த சினிமாக்காரர்களின் புண்ணியத்தால் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

“என் காத்திருப்புக்கும் தேடலுக்கும் கிடைத்த பரிசுதான் மக்களோட அன்பு. இதைவிட இந்த உலகத்தில் வேறு என்ன பெரிய மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது?” எனக் கேட்கிறார் அப்புக்குட்டி.

குறிப்புச் சொற்கள்