தமிழில் நயன்தாரா பல கோடிகளில் சம்பளம் பெறுகிறார் என்பது பலருக்கும் தெரியும். ஆனாலும், தன் சொந்த மலையாள மண்ணில் அப்படி சம்பளம் கிடைக்காது என்றாலும் கூட, தன்னைத் தேடி வரும் மலையாள வாய்ப்புகளை நிராகரிக்காமல் ஒப்புக்கொள்வது நயனின் பெருந்தன்மை என்கின்றனர் மல்லுவுட் வட்டாரத்தினர்.
‘ஜவான்’ படத்திற்குப் பிறகு பாலிவுட் திரையுலகுக்குச் செல்லாமல் மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள், நாயகன்களுக்கு ஈடாக சில படங்கள் என இவ்வாண்டு ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்போது தயாரிப்பாளராகவும் இருப்பதால், நடிப்பிற்கிடையே கூடுதல் பொறுப்புகளுடன் நயன் புன்னகைக்கிறார்.
‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
கன்னடத்தில் யஷ்ஷுடன் ‘டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யஷ்ஷின் சகோதரியாக நடிக்கிறார் என்ற பேச்சும் உள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கி வரும் இப்படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார்.
தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் ‘டெஸ்ட்’ படத்தில் மாதவன், சித்தார்த்துடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்திலும் நடித்துமுடித்துவிட்டதால் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் இரு படங்கள் கைவசம் உள்ள நிலையில், அவற்றில் ஒன்றில் மம்முட்டியுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.