நடிகர் அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் திருமலை படத்தை விளம்பரம் செய்யக்கூட அசோக் செல்வன் வராததை சுட்டிக்காட்டி தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார்.
அசோக் செல்வன்,அவந்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின் பெயரும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, இயக்குநர் ஆர்கே செல்வமணி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் திருமலையும் கதாநாயகி அவந்திகாவும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அசோக் செல்வன் பங்கேற்காதது குறித்து வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
டப்பிங் பேசுவதற்கு முன்னதாக, தனக்குக் கொடுக்க வேண்டிய மீதமுள்ள சம்பளத்தை கொடுக்குமாறு அசோக் செல்வன் நெருக்கடி கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு கூட வர முடியாத அளவிற்கு அசோக் செல்வன் வேலையாயிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

