‘ராயன்’ படத்தில் நடித்துள்ள நடிகை துஷாரா விஜயன் தனுஷுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தனுஷின் வெற்றியை தனது வெற்றிபோல் உணர்வதாகக் கூறியுள்ளார்.
தனுஷ் தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி, அதில் நடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் தனுஷின் தங்கையாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் தனுஷுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துஷாரா, தனது எக்ஸ் பக்கப் பதிவில், 2023 நவம்பர் மாதத்தை என்றும் என்னால் மறக்கமுடியாது. தனது படத்தில் நடிப்பதற்காக தனுஷ் என்னைச் சந்திக்க விரும்புவதாக அழைப்பு வந்தது. அதை என்னால் நம்ப முடியவில்லை. கடைசியில் அவரைச் சந்தித்ததை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
‘ராயன்’ பயணத்தின் மூலம் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சும்மா நிற்பது முதல் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் அணுகிய பாங்கு என்னை வியக்கவைத்தது. நீங்கள் ஒரு முன்மாதிரியானவர். மிகப்பெரிய ஆளுமையான நீங்கள், துர்கா கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமானவள் என நம்பியதற்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

