தேர்ச்சி பெற்ற நடிகையாக பக்குவப்பட்டுள்ளேன்: ஐஸ்வர்யா லெட்சுமி

தேர்ச்சி பெற்ற நடிகையாக பக்குவப்பட்டுள்ளேன்: ஐஸ்வர்யா லெட்சுமி

3 mins read
93a15c43-a959-49f4-b49b-41facdc8fc3c
நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. - படம்: ஊடகம்

எத்தனைப் படங்களில் நடித்தோம் என்பது முக்கியமல்ல, தரமான படங்களில் நடித்துள்ளோம் என்பதே முக்கியம் என்ற கொள்கையை தன்னுள் விதைத்துக் கொண்டுள்ளதாகக் கூறும் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி, வரும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்காமல் ஒரு தேர்ச்சி பெற்ற நடிகையாக விளங்குவதற்கு கதைத் தேர்வில் நல்ல பக்குவத்தை அடைந்துள்ளதாகச் சொல்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு மொழி ஒரு தடையல்ல எனும் நிலை தொடர்வதால்தான், பலதரப்பட்ட கலைஞர்களும் தங்களது பன்முகத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலால், இந்தியத் திரைப்படங்களின் தயாரிப்பு தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாகச் சொல்லும் ஐஸ்வர்யா லெட்சுமி, இது ஆரோக்கியமான விஷயம் என்றும் இதனால், ஏராளமான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என்றும் கூறுகிறார்.

தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள பாத்திரங்களாகத் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா லெட்சுமி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் படு சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

தமிழக வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், குடும்பம், வேலை, தன்னம்பிக்கை, நமக்கு நாமே ஆதரவாக இருப்பது இவையனைத்தும் எல்லாப் பெண்களுக்கும் முக்கியம் தேவை.

யாரும் நாம் போகும் இடங்களுக்கெல்லாம் வரமாட்டார்கள். நம்மை நாம்தான் அக்கறையுடன் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பக்குவப்பட்ட பெண்ணாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.

மம்முட்டி, மணிரத்தினம், கமல்ஹாசன் உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் பணிபுரிந்தபோது, கதைத் தேர்வு, பாத்திரங்கள் தேர்வு வரை அனைத்திலும் எப்படி பக்குவமாகச் செயல்பட வேண்டுமென கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்.

ஒரு மலையாள நடிகையாகத்தான் என் நடிப்புலகைத் துவங்கினேன். ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் என்னை ‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலியாகவும், ‘கட்டா குஸ்தி’ கீர்த்தியாகவும் பார்த்துதான் பல அம்மாக்கள், அக்காக்களும் பேசுகிறார்கள். ‘கார்கி’ படத்தையும் பாராட்டுகிறார்கள் என்கிறார்.

மம்முட்டி எனக்கு கொடுத்த மிகப்பெரிய அறிவுரை, “நீ மிகவும் வேகமாகப் போகிறாய். இவ்வளவு வேகம் தேவையில்லை. முதலில் நமக்கான இடத்தையும் அங்கீகாரத்தையும் சம்பாதிக்க வேண்டும். பிறகுதான் கடினமான காரியங்களில் எல்லாம் ஈடுபட வேண்டும் என்றார்.

‘கார்கி’ படம் முடிவதற்குள் ஒருவித மன அழுத்தமே வந்துவிட்டது. அதனால்தான் ‘கார்கி’ பத்திரிகையாளர் சந்திப்பில் என்னையே மறந்து அழுதேன். இன்னும் பத்து ஆண்டுகள் வரை தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பெரிய பொறுப்பு வேண்டாம் என நினைக்கிறேன் என்று உறுதியாகச் சொல்கிறார்.

இப்போது நடித்து வரும் நடிகைகளுக்கு நிறைய கதவுகள் திறந்திருக்கின்றன. ஏகப்பட்ட வாய்ப்புகளும் குவிகின்றன.

குறிப்பாக நயன்தாராவின் வளர்ச்சி உற்சாகத்தைத் தருகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பதற்கு ஆரம்பப் புள்ளி வைத்த நயன்தாராவை மனதாரப் பாராட்ட வேண்டும்.

சாய் பல்லவி ஜாலியாக வர்த்தக ரீதியிலான படங்கள், நாலு பாட்டு, ஆடல் என நடித்திருக்கலாம். ஒரு தயாரிப்பாளராக சாய் பல்லவி ‘கார்கி’ படத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் நிச்சயம் இப்படி ஒரு மைல்கல் படம் கிடைத்திருக்காது.

உடல், மன ரீதியாக எத்தனையோ தடைகள், பிரச்சினைகள் அத்தனையும் கடந்து திரையுலகில் முத்திரை பதித்து வருகிறார் சமந்தா. ராஷ்மிகா மந்தனா எவ்வளவோ பரபரப்பாக படங்களில் நடித்து வந்தாலும் தனக்கென தனிப்பட்ட நேரத்தை செலவிடத் தயங்கமாட்டார்.

அடுத்து மிருணாள் தாக்கூர் தனது பாத்திரத்தை தேர்வு செய்யும் முறை எனக்குப் பிடிக்கும். இவர்களின் வளர்ச்சி எல்லாம் அடுத்து வரும் நடிகைகளுக்கு நல்ல உதாரணம் என்கிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.

இப்போது, மணிரத்னத்தின் இரண்டாவது படமான ‘தக் லைஃப்’பில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் ‘ஹெல்லோ மம்மி’ படத்தின் வேலை முடிந்துவிட்டது. அந்தப் படம் நகைச்சுவையுடன் கூடிய திகிலூட்டும் படமாக இருக்கும்.

மலையாளத்தில் மேலும் இரண்டு படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. தெலுங்கில் சாய் தரம் தேஜுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளேன். மற்றும் ஓடிடியில் ‘தீவினை போற்று’ தமிழ் இணையத்தொடர் உருவாகி வருகிறது என்கிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.

குறிப்புச் சொற்கள்