பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்தியத் திரைத்துறையில் வசூல் மன்னனாகத் திகழ்ந்து வருகிறார். இவர், ‘கொவிட்19’ காலகட்டம் குறித்த தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்.
கிருமிப் பரவல் காலத்தில் ஒருபுறம் நன்மையும், மறுபுறம் தீமையும் ஏற்பட்டதாகக் கூறியுள்ள ஷாருக்கான், என் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிட்டியதாகச் சொல்கிறார்.
அதேவேளையில் நான் நடித்த ‘ஜீரோ’ படத்தில் அனுஷ்கா ஷர்மா, கத்ரினா கைப், சல்மான் கான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இருப்பினும் படம் வெற்றியடையாததால் அடுத்தடுத்து நான் நடிக்கும் படங்களை மக்கள் விரும்புவார்களா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, ஒரு உணவகத்தைத் திறக்க முடிவெடுத்து, இத்தாலிய உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுக்கொண்டேன் என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 2018ல் ஷாருக்கான் நடிப்பில், ரூ.200 கோடி செலவில் உருவான ‘ஜீரோ’ படம் ரூ.186 கோடி மட்டுமே வசூலித்தது. கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ படங்கள் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தன.

