‘ஜமா’ படம் எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை தந்திருக்கிறது என்று அம்மு அபிராமி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.
இயக்குநராகவும் நடிகராகவும் பாரி இளவழகன் நடித்துள்ள படம் ‘ஜமா’. தெருக்கூத்து கலைஞர்களின் குறிப்பாக பெண் வேடம் அணிபவர்களின் வாழ்க்கையை இந்தப் படம் மையமாகக்கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சண்டை, மர்மம், திகில், குத்து, வெட்டு என தமிழ் சினிமா பாதை மாறியுள்ள நிலையில் பாரம்பரிய கலாசாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர்.
இந்தப் படத்தில் பாரி இளவழகனுடன் அம்மு அபிராமி இணைந்து நடித்துள்ளார்.
பல நம்பிக்கைக்குரிய வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அம்மு அபிராமி. இவரது கதைத்தேர்வு ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தது.
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஜமா’ படமும் அம்மு அபிராமிக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இப்படம் குறித்து நடிகை அம்மு அபிராமி கூறுகையில், எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது. இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கும். எனக்கு அது ‘நீ இருக்கும் உசரத்துக்கு’ பாடல் மூலம் நிறைவேறியதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.
இப்படத்தில் சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ். சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே இளவழகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி சேத்தன் கூறுகையில், “இந்தப்படம் திரையரங்குகளில் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்தையும் தொடும்,” என்று கூறியுள்ளார். இப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார்.

