யோகி பாபு நடித்திருக்கும் இணையத்தொடரான சட்னி, சாம்பாரின் ருசி அபாரம் என்கிறது கோலிவுட்.
சட்னி சாம்பார் என்ற தலைப்பைக் கேட்டதுமே இரண்டு உணவுக் கடைகளுக்கு இடையிலான போட்டி என்றுதான் தோன்றும். அறிமுகக் காட்சிகளும்கூட அதேமாதிரிதான் இருக்கின்றன. ஆனால், தொடர் அப்படி இல்லை. தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கதை என்னவோ, பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழைய விஷயம்தான். எத்தனையோ அக்னி நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறோம். ஒரு அப்பா, இரு மனைவிகள், அவர்கள் வாரிசுகள், பிறகு பிரச்சினைகள். ஆனால், சட்னி சாம்பாரில் தீப்பறக்கிற மோதல்கள் எதுவும் இல்லை.
ஆறு பகுதிகளாக ஏறத்தாழ 4 மணி நேரம் ஓடுகிறது. தொடரை நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பார்க்கும்படியாகவும் அலுத்துப்போகாமலும் நேரம் போனது தெரியாமல் தொடரை ரசிக்க முடிகிறது.
பட்டினப்பாக்கத்தில் இட்லிக் கடையில் அறிமுகமாகிற காட்சியிலிருந்து தொடர் முடிகிற வரையிலும் சிறிதும் தொய்வில்லாமல் எடுத்துச்செல்கிறார் யோகி பாபு.
ஒரு காட்சியில் நாலைந்து பேரை அடித்துப் போட்டுவிட்டு, “ஏன்டா, என்னைப் போய் சண்டை போட வைச்சீங்க,” என்று பேசும்போது கவனிக்க வைக்கிறார். நகைச்சுவை நடிகர்தான். நகைச்சுவைகளையும் வெடிக்கிறார், ஆனால், நன்றாகவே நடித்தும் இருக்கிறார்.
இந்தத் தொடரில் யோகி பாபுவுக்கு வாணி போஜன் ஜோடியாக நடித்து இருக்கிறார். அவருடைய காட்சிகள் குறைவாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை நன்றா பயன்படுத்தி இருக்கிறார்.
கத்தி, ரத்தம், கூச்சல், பழிவாங்கல் எதுவுமில்லாமல் சந்தோஷமாக சட்னி சாம்பாருடன் பொழுதைக் கழிக்கலாம் என்கிறது கோலிவுட்.

