பசியை மறந்து பாடல் பாடுவேன்: கானா காதர்

பசியை மறந்து பாடல் பாடுவேன்: கானா காதர்

2 mins read
07653d82-7f90-469b-98b4-c02a49716758
தனுஷ், ‘கானா’ காதர், ஏ.ஆர். ரஹ்மான். - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘ராயன்’ படத்தில் இடம்பெறும் ‘வாட்டர் பாக்கெட்’ பாடலால் இப்போது மூன்று பெரிய படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் ‘கானா’ காதர்.

எனினும், இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கு என் அம்மாவும் என்னை வளர்த்தெடுத்த பாட்டியும் உயிருடன் இல்லை எனவும் அவர் வருத்தப்படுகிறார்.

என் குடும்பத்தின் பசி, வறுமை எல்லாத்தையும் போக்கியது எனக்குப் பிடித்த ‘கானா’ பாடல்தான்.

பசியை மறந்து பொழுதுக்கும் பாடிக்கொண்டிருப்பேன். அந்த ஆர்வம்தான், இவ்வளது தூரத்துக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

நான் கானா பாடல் எழுதிய முதல் படம் பாதியிலேயே நின்றுபோய்விட்டாலும், ‘ராயன்’ பெரிய அளவில் வெற்றிபெற்று எனது கவலைகளையெல்லாம் போக்கிவிட்டது என்கிறார் சாயம் பூசுபவரான கானா காதர்.

நான் குடியிருக்கும் வண்ணாரப்பேட்டை மக்கள் எல்லாம் பாராட்டுவது பெருமையாக உள்ளது என்றும் அவர் சொல்கிறார்.

இளைஞர்களை ஈர்த்துள்ள ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி ஒலித்து வருகிறது.

“வாட்டர் பாக்கெட் பாட்டால என் வாழ்க்கையே மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த சூழலில், ‘ராயன்’ வாய்ப்பு என்னைப் பற்றிக்கொண்டது. என் பாடல் தேர்வானதும் மகிழ்ச்சியில் வாயடைத்து நின்றேன்.

ஏனெனில், சிறிய வயதிலிருந்து வலி, வேதனை, நிராகரிப்பு, கஷ்டம் மட்டும்தான் எனக்குத் தெரியும். என் பெற்றோர் இறந்துவிட்டனர். அண்ணன், தம்பிகள் மூவரும் சாப்பாட்டுக்குக்கூட வழியின்றி சிரமப்பட்டுள்ளோம். அப்படியொரு வறுமை.

இப்போது, தனுஷ் சார், ரஹ்மான் சார் இருவரும்தான் என் வாழ்க்கையை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

“நான் சம்பளம் எல்லாம் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. சினிமா வாய்ப்பைத்தான் முக்கியமாகக் கருதுகிறேன். நமது திறமையும் பேரும் என்றும் நிலைத்திருக்கும்.

‘ராயன்’ படப் பாடலுக்கு வாங்கிய சம்பளத்தில் என் மனைவிக்கு பர்தாவும் நெளஷின், ஆல்யா என்ற இரு மகள்களுக்கு நல்ல உடைகளும் வாங்கிக்கொடுத்தேன்.

சாயம் பூசும் வேலையில் ஒரு நாளைக்கு 700 ரூபாய் கிடைக்கும். அது, வீட்டு வாடகைக்கே போய்விடும். ‘ராயன்’ பட வாய்ப்புக்குப் பிறகுதான் குடும்பத்தினருக்கு எல்லாம் வாங்கிக்கொடுக்க முடியுது. இப்போதுதான், ஒரு நல்ல அப்பாவாகவும் உணர்கிறேன். ஒரு அப்பாவாக மகள்களுக்கான கடமையைச் செய்கிறேன்.

ஆனால், ஒரு மகனாக, பேரனாக என் கடமையைச் செய்வதைக் கண்டு மகிழ அம்மாவும் பாட்டியும் இல்லையே என நினைக்கும்போது மனது வலிக்கிறது என்கிறார் ‘கானா’ காதர்.

குறிப்புச் சொற்கள்