தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாகத் திகழ்கிறார் நடிகை அபர்ணதி.
இவரது நடிப்பில் வெளிவந்த ‘ஜெயில்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், ‘நாற்கரப்போர்’ என்ற படத்தில் அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார்.
எஸ். வேலாயுதம் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கும் ‘நாற்கரப்போர்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ளும்படி நடிகை அபர்ணதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், “ரூ.3 லட்சம் கொடுத்தால் வருகிறேன், இல்லையெனில் வரமுடியாது,” என்று அபர்ணதி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக்கேட்டு கடும் கோபமடைந்த மற்றொரு தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, “தமிழ்த் திரையுலகுக்கு இவர் போன்ற நடிகைகள் தேவையில்லை,” எனச் சாடியுள்ளார்.
‘இறுகப்பற்று’ நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய சுரேஷ் காமாட்சி, இப்படத்தின் கதையைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருந்தது. இங்கு வெற்றி, தோல்வி என்பது சகஜம்.
“நம் வேலையைச் சிறப்பாகச் செய்தால் போதும். சிறிய படம், பெரிய படம் எனும் வித்தியாசம் கூட பார்க்கவேண்டியதில்லை. சிறிய படங்களும் கோடிக்கணக்கில் வசூலைக் கொடுத்துள்ளன,” என்றார்.
தொடர்ந்து, படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு நிகழ்வுக்கு நாயகி அபர்ணதி வராததை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அண்மைக்காலமாக திரையுலக நடிகைகள் படத்தின் முக்கிய நிகழ்வுக்கு வர மறுப்பது சாபக்கேடு ஆகிவிட்டது. இந்நிகழ்வுக்கு என தனியாக ரூ.3 லட்சம் கொடுத்தால் வருகிறேன். இல்லையெனில் முடியாது என்று அபர்ணதி கூறியதாக தயாரிப்பாளர் வேலாயுதம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து நானும் அவரை கைப்பேசியில் அழைத்துப் பேசியபோது, வர முடியாது என்று சொல்லிவிட்டார். அத்துடன், இரண்டு மூன்று உத்தரவுகளையும் போட்டார். மேடையில் அவர் யாருடன் உட்காரவேண்டும், யாரெல்லாம் இருக்கக்கூடாது, தனக்குச் சமமானவர்கள் தான் உட்கார வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தார். இது என்னை மிகவும் கோபப்படுத்தி விட்டது.
இதுதொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்று சொன்னதற்கு, நான் நடிகர் சங்க உறுப்பினர் அல்ல எனச் சொல்லிவிட்டார்.
கடைசியாக வருவீர்களா? மாட்டீர்களா? என்று கேட்டதற்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் வருவேன் என்று விடாப்பிடியாகச் சொன்னார். நீங்கள் வரவே வேண்டாம் என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டேன்.
அதன்பின்னர் இரண்டு நாள் கழித்து என்னை அழைத்து, “மன்னிக்கவேண்டும், தெரியாமல் பேசிவிட்டேன், நிகழ்ச்சிக்கு வருகிறேன்,” என்றார்.
மீண்டும், தான் வெளியூரில் இருப்பதாகக் கூறுகிறார். அவர் வெளியூரிலேயே இருக்கட்டும். இவர் போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவுக்குத் தேவையில்லை. இது மிகவும் வருத்தமானது. இதை மற்ற தயாரிப்பாளர் களும் தெரிந்துகொள்வதற்காகவே எனது ஆதங்கத்தை இந்த மேடையில் பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், அசோக் செல்வன் தனது படத்தின் விளம்பர நிகழ்வுக்கு வரமறுத்ததாக தயாரிப்பாளர் திருமலை ஆதங்கத்துடன் பேசியிருந்த நிலையில், தற்போது நடிகை அபர்ணதியின் இத்தகைய செயல் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
‘நாற்கரப்போர்’ பட விழாவில் அபர்ணதியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளுத்து வாங்கிய காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.