நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தான் தொடர்ச்சியாக செம்பருத்தி தேநீர் அருந்தி வருவதாகவும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், மருத்துவம் குறித்த தவறான தகவல்களை நயன்தாரா வெளியிட்டுள்ளார். அதனை நம்பாதீர்கள், அனைத்தும் பொய் என்று கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் விமர்சித்துள்ளார்.
நயன்தாரா தனது இன்ஸ்டகிராம் பதிவில், செம்பருத்தி தேநீர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதனை எனது உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக்கியவர் ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால். இது நீண்டகாலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இதில் அதிகமுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உதவிபுரியும்.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்.
நமது நோய் எதிர்ப்புச் சக்தியை சமநிலையில் வைத்திருக்கவும் இந்த செம்பருத்தி தேநீர் உதவுகிறது. பருவகால தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது என்று நயன்தாரா பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தப் பதிவு குறித்து கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
நடிகை நயன்தாராவை நடிகை சமந்தாவைவிட இரண்டு மடங்குக்கும் மேலானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். ஏறக்குறைய 8.7 மில்லியன் பேர் நயன்தாராவை பின்தொடரும் நிலையில், செம்பருத்தி தேநீரை அருந்தும்படி கூறியுள்ளார். இதனைத் தினமும் பருகுவதால் ஆண், பெண்ணுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செம்பருத்தியால் விளையும் மருத்துவக் குணங்கள் என்று நயன்தாரா குறிப்பிட்ட எதுவுமே நிரூபிக்கப்படாத உண்மைகள்.
தொடர்புடைய செய்திகள்
எதுவும் தெரியாமல் தவறான தகவல்களைக் கொண்டு தன்னை பின்தொடர்பவர்களை வழிநடத்துகிறார். செம்பருத்தி தேநீரின் நன்மைகள் குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அதனை யாரும் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இதே மருத்துவர் நடிகை சமந்தாவின் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்பாடு தொடர்பான பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது இந்தப் பதிவைத் தொடர்ந்து நயன்தாரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்த தனது பதிவை நீக்கியுள்ளார்.
மேலும், இதுகுறித்து மருத்துவர் பிலிப்ஸ் கூறுகையில் பதிவு நீக்கப்பட்டு உள்ளது. ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை என்றார். பிரபலங்களின் இத்தகைய செயல்களைத் தடுக்க சட்டங்கள் தேவை எனப் பதிவிட்டுள்ளார்.

