மனதிற்கு நெருக்கமான பல படங்களில் நடித்துள்ளேன்: ஆன்ட்ரியா

மனதிற்கு நெருக்கமான பல படங்களில் நடித்துள்ளேன்: ஆன்ட்ரியா

3 mins read
aced4a6e-d298-4f33-94f4-a7e480012c61
நடிகை ஆன்ட்ரியா. - படம்: indiglamour.com

தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகம் ஆகி தொடர்ந்து நடிகை, பின்னணி குரல் கலைஞர் எனப் பல்வேறு தளங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் நடிகை ஆன்ட்ரியா ஜெரெமையா.

இவருடைய திரையுலகப் பயணத்தின் தொடக்கத்தில் இவர் நடித்து வெளியான வடசென்னை உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்று தந்தது.

இவருடைய அழுத்தமான நடிப்பால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்குக் கிடைத்தது. நடிப்பில் மட்டுமல்ல பாடல்கள் பாடுவதிலும் தனது திறமையை நிரூபித்து உள்ளார் இவர்.

இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ உள்ளிட்ட பல அதிரடி பாடல்கள் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார் ஆன்ட்ரியா. பின்னணி குரல் கலைஞராக பல முன்னணி நடிகைகளுக்கும் இவர் குரல் கொடுத்து வருகிறார். 40 வயதை நெருங்கிய நிலையிலும் தொடர்ந்து தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை மிகச் சிறப்பாக பராமரித்து வருகிறார் இவர்.

இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இவரது உடல் கட்டு, கவர்ச்சி ஆகியவை ரசிகர்களை தொடர்ந்து கட்டிப்போட்டு வருகிறது. இந்நிலையில், உலகளவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் இவர் பாடல்கள் பாடி வருகிறார்.

இசை நிகழ்ச்சிகளில் நடனத்துடன் இவர் பாடும் அழகில் ரசிகர்கள் சொக்கி போகின்றனர். இதன் காணொளிகளையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆன்ட் ரியா வெளியிட்டு வருகிறார். இதனால், ஏராளமான ரசிகர்கள் இவருடைய சமூக பக்கத்தை பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி புதுச்சேரியில் பிரபல நகைக்கடை திறப்புவிழா நிகழ்ச்சியில் ஆன்ட்ரியா பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இவர் அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார்.

இவர் பணியாற்றி வரும் திரைப்படம் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், “நான் இப்போது கவினின் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து வருகிறேன்” என்றார்.

உங்கள் பாடல்கள் இப்போது வரவில்லையே பாடுவதை நிறுத்தி விட்டீர்களா என்ற கேள்விக்கு, “அப்படியெல்லாம் இல்லை. நான் பாடாமல் இருக்கிறேன். அவ்வளவுதான். மீண்டும் பாடத் தொடங்குவேன்” என்றார் ஆன்ட்ரியா.

இதையடுத்து உங்களுக்கு யாருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு “அப்படியெல்லாம் பெரிய ஆசை எனக்கு எதுவும் இல்லை” என்றார் இவர்.

பிறகு விஜய் அரசியல் வந்தது குறித்தும் இனி வரும் காலங்களில் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக எனக்கு அரசியலுக்கு வரும் நோக்கமும் இல்லை. நான் விஜய்யை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என பதிலளித்தார். மேலும் வட சென்னை 2 குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறனிடம் தான் இந்தக் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் வடசென்னை 2 படம் உருவானால் அதில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாகவும் ஆன்ட்ரியா கூறினார்.

இவர் ஆசைப்பட்டு நடிக்க விரும்பும் கதாபாத்திரம் குறித்த கேள்விக்கு, தான் இதுவரை தனது மனதிற்கு நெருக்கமான பல படங்களில் நடித்துள்ளதாகவும் புதிதாக தான் செய்வதற்கு எந்த கதாபாத்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்