நயன்தாராவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ள விஜய் ஆண்டனி

2 mins read
cba48d87-0f86-49a3-93df-dab393bcb146
மேடையில் காலணி இல்லாமல் அமர்ந்த விஜய் ஆண்டனி. - படம்: ஊடகம்

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக மாறி இன்று தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், செருப்பு இல்லாமல் நடந்தால் மாற்றம் வரும் என விஜய் ஆண்டனி நேர்காணல் ஒன்றில் பேசியது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சின்னத்திரையில் இசையமைப்பாளராக இருந்து சுக்ரன் திரைப்படம் மூலம் முதன் முதலில் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதை தொடர்ந்து டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் என தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.

இதைத் தொடர்ந்து 2012ல் வெளிவந்த ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். அவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் போன்ற படம் வெற்றியடைந்தது. அதில் குறிப்பாக பிரச்சைக்காரன் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அதையடுத்து தமிழ் திரையுலகில் நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் இயக்குநராகவும் அவர் ஜொலித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி கடந்த சில நாட்களாக இசைவெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு போன்ற எந்த விழாவிற்கு சென்றாலும் காலில் காலணி இல்லாமலே காணப்பட்டார். இதுகுறித்து தொகுப்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “திடீரென எனக்கு அப்படி தோன்றியதால், காலணி இல்லாமல் நடந்து பார்த்தேன் அது எனக்கு பிடித்து இருந்தது. அது மட்டுமன்றி, எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றார் விஜய் ஆண்டனி. மேலும், “மனத்திற்கு உத்வேகம் வேண்டுமா மனம் சோர்வாக இருக்கிறதா உங்களுக்குள் ஏதாவது மாற்றம் நிகழ வேண்டுமா காலணி இல்லாமல் நடந்து பாருங்கள் மாற்றம் வரும்,” என்று கூறியிருந்தார்.

விஜய் ஆண்டனியின் இந்தப் பேச்சு அவரது ரசிகர்கள் வரவேற்றாலும் மருத்துவ ரீதியாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து இணையத்தில் மருத்துவர் ஒருவர்,” அக்லோஸ்டோமோ குடற்புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகையை உருவாக்கும். இந்த ரத்த சோகையால் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பகால மரணம் தொடங்கி குழந்தைகள் மரணம் வரை ரத்தசோகை கொண்டுவந்துவிடும்,” என்றார்.

இதில் இருந்து தப்பிக்க காலணி அணிவது தான் சிறந்த வழி என்றும் சிலர் அரைகுறையாக எதையாவது தெரிந்து கொண்டு பேசுவதை நம்பி ரத்த சோகைக்கு ஆளாகாதீர்கள் என்று மருத்துவர் விஜய் ஆண்டனியைக் கடுமையாக சாடி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்