தமிழ்த் திரையுலகில் காலூன்றி அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்து வரும் மலையாள நடிகையான அர்த்தனா பினு, “எவ்வளவு நாள்தான் நானும் நல்லவளாகவே நடிப்பது? தொடர்ந்து இதுபோல் நடிப்பது சலிப்பூட்டுகிறது,” எனச் சொல்கிறார்.
எதிர்மறையான வில்லி பாத்திரங்கள், கொடூரத் திட்டங்களைத் தீட்டும் ராட்சசி பாத்திரங்களில் அதிரடி காட்ட விரும்புவதாகவும் கூறுகிறார்.
‘தொண்டன்’, ‘செம’, ‘கடைக்குட்டிச் சிங்கம்’, ‘வெண்ணிலா கபடிக் குழு 2’ உள்ளிட்ட படங்களில் பக்கத்து வீட்டுப் பெண்ணின் சாயலில் கவனம் ஈர்த்திருந்த அர்த்தனா, அண்மையில் வெளிவந்த ‘வாஸ்கோடகாமா’ படத்தில் நவீனமான நாயகியாக நடித்துள்ளார்.
தமிழக வார இதழ் ஒன்றுக்கு அர்த்தனா பினு அளித்துள்ள நேர்காணலில், நடிகர் நகுல் மிகவும் நட்பாகப் பழகக் கூடியவர். என்னைப்போலவே திரையுலகில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்.
ஆனால், அதனை முகத்தில் காட்டிக்கொள்ளவே மாட்டார். எப்போதும், கலகலப்பாக இயல்பாக இருப்பார். அவரால்தான் ‘வாஸ்கோடகாமா’ படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் கல்லூரி நண்பர்கள்போல் ஜாலியாக இருந்தோம் என்று சொல்கிறார்.
இனி வரும் படங்களில் கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகக் கூறுபவர், எனக்கென ஓர் எல்லை வைத்துள்ளேன். அந்த எல்லையைத் தாண்டாமல் கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதிப்பேன் என்கிறார் அர்த்தனா.
சமுத்திரக்கனி, மம்முட்டி, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்களிடம் எப்படி இயல்பாக, தைரியமாக நடிப்பது என கற்றுக்கொண்டேன்.
கேமராவை இயக்கத் தொடங்கியதும் அவர்களுக்குள் தீப்பிழம்பு போல் ஒரு உணர்வு கிடைக்கிறது. எந்த தயக்கமோ, சந்தேகமோ இல்லாமல் தெளிவான மனநிலையில் ஒரு சொடுக்கு போடும் நேரத்தில் மிகவும் சிறப்பாக காட்சிகளில் நடித்துவிடுவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
நடிகர் மம்முட்டியை ‘ஷைலாக்’ படத்தில்தான் சந்தித்தேன். தனது பல அனுபவங்களையும் அறிவுரைகளாகச் சொல்லிக்கொடுத்தார். மிகவும் எளிமையானவர். எவ்வளவு பெரிய புகழ்பெற்ற ஆளுமையாக இருந்தாலும் அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்.
அதேபோல் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் மூத்த நடிகர்கள் பலர் இணைந்து நடித்திருந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒரே ஒரு படத்தில் நடித்து அனைத்தையும் கற்றுக்கொள்வது என்பது இயலாத காரியம் என அறிந்துகொண்டேன். இயக்குநர் பாண்டிராஜ் என வாழ்க்கையிலே மிகவும் முக்கியமான ஒருவர் என்கிறார் அர்த்தனா.
அம்மாதான் என்னை வளர்த்தார்கள். ‘மனதுக்குப் பிடித்ததைச் செய், ஆனால், படிப்பு என்பது மிகவும் முக்கியம்’ என்று எப்போதும் சொல்வார்கள்.
அந்த அறிவுரை ஆழமாக பதிந்ததாலோ என்னவோ, எந்நேரமும் எதாவது ‘கோர்ஸ்’ எடுத்து படித்துக்கொண்டே இருப்பேன்.
ஜர்னலிஸம், மாஸ் கம்யூனிகேஷன், காணொளி எடிட்டிங்கில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளேன். தொடர்ந்து கனடாவில் சமூக அறிவியலில் மற்றொரு முதுகலை பட்டப் படிப்பை படித்துள்ளேன். இப்படி எனது படிப்புலகம் தொடர்ந்து கொண்டே செல்கிறது என புன்னகைக்கிறார்.
திரையுலகுக்குள் நுழையவேண்டும் என்பது எனது கனவு. எப்போதும் அதையே கற்பனையில் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருப்பேன். எனக்கு மகாபாரதம் கதையில் வரும் திரௌபதி பாத்திரம் மீது எப்போதும் ஒரு அடங்காத ஆசை இருக்கும்.
நாம் ஒருவரது வாழ்க்கையைப் படித்து, புரிந்து அவர்களைப் போன்றே மாறி நடிக்கும் சவால் எனக்குப் பிடிக்கும். இவை அனைத்திற்கும் மேலாக தள்ளாத வயதிலும்கூட நான் நல்ல நடிகை என்ற பெயருடன் நடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தான் தனது கனவு என்கிறார் அர்த்தனா.
நடிகர் வெற்றி அறிமுகமாகும் தெலுங்குப் படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டுள்ளதாகக் கூறும் அர்த்தனாவுக்கு பாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். எப்போதும் எனது அறையில் பாடிக் கொண்டேதான் இருப்பேன். அம்மா, நண்பர்கள் முன்பும் அவ்வப்போது பாடிக் காட்டுவேன் என்கிறார்.
பொதுவாக அப்பா பெயரைத்தான் எல்லோரும் தங்களது பெயரின் பின்னால் இணைத்துக் கொள்வார்கள். இதில் நான் கொஞ்சம் வித்தியாசம். பினு என் அம்மா பெயர். பிறந்தது முதல் இப்போது வரை எனக்காக வாழ்பவர் என் அம்மாதான். நான்தான் அவரது உலகம். அவர்தான் என் உலகம். நாளைக்கு திருமணம் ஆனாலும்கூட இந்தப் பெயரோடுதான் இருப்பேன் என்கிறார் அர்த்தனா பினு.