இளையராஜாவுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு தந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்கள்

1 mins read
e8e4035b-beec-4e93-997f-e180b3eb303f
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகர்கள். - படம்: ஊடகம்

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவிற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, இழப்பீடாக இளையராஜாவிற்கு ரூ.60 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பட்டிதொட்டி எங்கும் வெற்றிபெற்ற படமாகும். இந்தப் படத்தின் கடைசிக் கட்டத்தில் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை படக்குழு பயன்படுத்தியது. 33 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்தப் பாடல் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால், பாடலைப் பயன்படுத்துவது குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெறவில்லை.

இதையடுத்து, ‘குணா’ படத்திற்கு இசையமைத்த இளையராஜா, ரூ.2 கோடி இழப்பீடு வழங்கக் கோரி ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிராக சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்கள், இளையராஜாவை நேரில் சந்தித்துப் பேசியதை அடுத்து இருவருக்கும் இடையே சமரசம் காணப்பட்டது.

இதில் இளையராஜா இழப்பீடாக கேட்ட ரூ.2 கோடிக்குப் பதிலாக ரூ.60 லட்சம் கொடுக்க படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால் வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்குச் செல்லாமல், ஒரு சுமூக முடிவை எட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்