இந்தியாவின் முன்னணி விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான ஷாலினி ஹர்ஷ்வால், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் புய்ரா என்னும் சிற்றூரில் வாழும் மூன்று பெண்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார். இதற்கு ‘அவுட் ஆஃப் எ ஜாம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மிகவும் பின்தங்கிய புய்ராவில் ஒழுங்கான சாலைகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. மக்கள் அனைவரும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகளே இல்லாத அந்தச் சிற்றூர் குறிப்பிடத்தக்க வகையிலான மாற்றத்தை அடைகிறது. அது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதையே அந்த ஆவணப் படம் விளக்குவதாக அமைந்துள்ளது.
புய்ராவில் வாழும் மூன்று பெண்களின் எழுச்சியூட்டும் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது அந்த ஆவணப்படம். அந்த மூன்று பெண்கள் தங்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு அந்த ஊர் மக்களிடமும் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி, ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கின்றனர்.
அப்பகுதிகளில் கிடைக்கும் ஏராளமான பழங்களைக் கொண்டு பழக்கூழ் (jam) தயாரிக்கும் எண்ணம் உருவாகிறது லின்னெட் முஷ்ரன் என்பவருக்கு. அதையடுத்து அவர், புய்ராவில் ஒரு சிறிய பழக்கூழ் தொழிற்சாலையை நிறுவினார். அந்தத் தொழிற்சாலை இன்று பெரிய நிறுவனமாக உருவெடுத்து அந்த ஊரில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கூழ் என்றால் என்னவென்று அறிந்திராத அந்த ஊர் மக்கள் இன்றைக்கு பழக்கூழ் உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலையைக் கொண்டுள்ளனர்.
இதுவே இந்தப் படத்தின் கதை. இந்த ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி செவ்வாய்க்கிழமை யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆவணப் படம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

