அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வாருங்கள். போங்கள், என்னை ஆளை விடுங்கள். இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை என்று கூறியுள்ளார் நடிகர் அருள்நிதி.
தனது அரசியல் வருகை குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி, “தற்போது அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பில்லை. 2062ல் அதுகுறித்து யோசிக்கலாம். அப்போது நானும் உயிருடன் இருக்கமாட்டேன், நீங்களும் இருக்கமாட்டீர்கள்,” என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.
அஜய் ஞானமுத்து- அருள்நிதி கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘டிமான்டி காலனி’. இவர்களது கூட்டணியில் ‘டிமான்டி காலனி 2’ ஆம் பாகமும் உருவாகி உள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினத்தன்று படம் வெளியாக உள்ளது.
தமிழக நாளிதழ் ஒன்றுக்கு அருள்நிதி அளித்துள்ள பேட்டியில், “எங்களுடன் ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்கள் வெளியீடு கண்டாலும் ‘டிமான்டி காலனி 2’ படத்திற்கென்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த நம்பிக்கையிலும் விடுமுறை வருவதாலும்தான் படத்தை வெளியீடு செய்கிறோம்.
‘டிமான்டி காலனி 2’ படம் அதன் தயாரிப்புப் பணிக்காகவே பேசப்படும். பெரிய வெற்றியைத் தரும் எனவும் நம்புகிறேன். இந்தப் படத்தின் முடிவில் மூன்றாம் பாகம் தொடர்வதற்கான கருத்தும் உள்ளது. அதன்பின் 4ம் பாகம் வரை இந்தப் படம் செல்வதற்கான வாய்ப்புள்ளது. அதற்குமேல் போகாது.
என்னைத் தேடி வரும் கதைகளில் மட்டுமே நடித்து வருகிறேன். யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டதில்லை. அதேசமயம் என்னை வைத்து படம் எடுத்த பாண்டிராஜ், அஜய் போன்ற இயக்குநர்களிடம் கதை இருக்குமா எனக் கேட்டுள்ளேன்.
புது இயக்குநர்களை வைத்து படம் தயாரிக்கவும் ஆசைப்படுகிறேன். அதற்கு கொஞ்சம் காலமாகலாம்,” என்று தெரிவித்துள்ளார் அருள்நிதி.
தொடர்புடைய செய்திகள்
“ஒருவேளை நான் சினிமாவிற்கு வரவில்லை என்றால் நிச்சயம் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பேன். தாத்தாவின் எந்தக் கதையையும் என்னால் செய்யமுடியுமா எனத் தெரியவில்லை. சரியாகச் செய்யவில்லை என்றால் எங்கள் வீட்டிலேயே என்னைத் திட்டுவார்கள். அதனால் அதனை ரசித்துவிட்டுப் போவதே நல்லது,” என்று அருள்நிதி கூறியுள்ளார்.
கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் நடைபெற்ற ‘டிமான்டி காலனி 2’ படத்தின் விளம்பர நிகழ்வில் நடிகர்கள் அருள்நிதி, அருண்பாண்டியன், முத்துகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா, இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அருள்நிதி, இத்திரைப்படம் அனைத்து தொழில்நுட்ப நுணுக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முதல் பாகத்தைத் தழுவி இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வழக்கமான பேய் படங்களைப் போல் அல்லாமல் புதுவித அனுபவத்தைக் கொடுக்கும், திரையரங்குகளுக்குச் சென்று பார்த்தால் அந்த அனுபவத்தை உணரமுடியும். இப்படத்தின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் சிறந்த பின்னணி இசையைக் கொடுத்து திகில் அனுபவத்தை எகிற விட்டிருக்கிறார்.
அதே நாளில் இதர படங்களும் வெளியாவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த நடிகர் அருள்நிதி, வேண்டுமென்றே அந்த நாளில் இப்படத்தை வெளியிடவில்லை எனவும் அந்நாளில் வெளியாகும் அனைத்துப் படங்களுமே வெற்றிபெறவேண்டும் என்று விரும்புவதாகவும் அருள்நிதி கூறியுள்ளார்.

